நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை மறுநாள் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது, இதற்கு முன்னதாக நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி வெளியான ஜெய் பீம் திரைப்படம் தொடர்ந்து பல சர்ச்சைகளை கிளப்பியது குறிப்பாக பாமக சார்பில் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தன. அதன்படி தமிழகம் முழுவதும் நடிகர் சூர்யாவிற்கு எதிராகவும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்கள் பாமக சார்பில் நடத்தப்பட்டன, அதில் குறிப்பாக ஜெய்பீம் திரைப்படத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என பாமக சார்பில் பெருமளவு குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது. மேலும் இதற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய் பீம் படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் பல்வேறு நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன.

 



 

இந்த நிலையில் தற்பொழுது பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில், வக்கீல் சந்துரு உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் உண்மையான பெயரில் வெளியிடப்பட்டது. ஆனால் மாற்று சமுதாயத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிசாமியை குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது. சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் சாதி வன்முறையை தூண்டும் வகையில் அந்த திரைப்படம் வெளிவந்தது. இதற்காக வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காதவரை அவர் நடிக்கும் திரைப்படங்களை கடலூர் மாவட்டத்தில் திரையிடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 



 

நடிகர் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளிவருகிற நிலையில், இந்த அறிவிப்பை பா.ம.க. மாணவர் சங்கம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன்னதாக கடலூர் மாவட்டத்தில் ஜெய் பீம் படத்திற்கும் நடிகர் சூர்யாவிற்கும் எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக கடலூர் பெரியார் சிலை அருகே நடிகர் சூர்யா அவர்களின் உருவ பொம்மையை எரித்தும் சூர்யாவிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி பாமக வினர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பின்னர் கடந்த நவம்பர் மாதம் ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாகக்கூறி மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி சார்பில் வழக்கறிஞர் மகேந்திரன் சிதம்பரம் 2-ஆம் எண் மாஜிஸ்திரேட் கோர்டில் ஜெய் பீம் படக்குழுவினர்களான 2டி நிறுவனம்,நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவை அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.