விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.விரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை எதிர்ப்பு,‌ மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சி உரை யாற்றினார்.


அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்:-  ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் விசிக தலைவர் தொல் திருமாவளவன் திகழ்ந்து வருகிறார். வீரமணி வென்றிடுக, வெற்றிமணி ஒலித்திடுக என முன்னாள் முதல்வர் கலைஞர் கூறியது போல், தற்பொழுது தி.க தலைவர் வீரமணி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளார் என கூறினார்.


விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில்:-  சமூகநீதியை காப்பாற்ற வேண்டும், சமூக விரோத சக்திகளை விரட்டியடிக்க வேண்டும் என்கிற கொள்கையோடு நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை பரப்புரை பயணத்தை தமிழர் தலைவர் வீரமணி மேற்கொண்டிருக்கிறார். உடல் நிலை சரியில்லை என்றாலும், சோம்பி இருக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை மையப்படுத்தி நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை, உழைக்கும் மக்களுக்கு எதிராக மாநில உரிமைகளை பறிக்க கூடாது என்ற இந்த மூன்று பிரச்சினைகளை மையப்படுத்தி இந்தப் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.




இச்சமூகம் விழிப்புணர்வு பெறுவதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பான கருத்துக்களை மக்களிடையே கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதற்காக சிறு கையேடு ஒன்றையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். சங்கி என்று நாம் கூறி வருகிறோம் சங்கி என்பது சங்கம் அல்லது அமைப்பு ஆகும்,  ஆர்எஸ்எஸ் அமைப்பு பாரதிய ஜனதா கட்சியை வைத்து இந்த தமிழ்நாட்டை கைப்பற்றி வருகிறார்கள். தந்தை பெரியார் பேசிய அரசியலுக்கு நேர் எதிராகவும் அம்பேத்கர் கொள்கை கோட்பாட்டுக்கு நேர் எதிர் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.




பார்ப்பன சமூகத்தின் நலனை மையமாகக் கொண்டு மராட்டிய, குஜராத்திய பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பின் பெயர் தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு. பிறப்பால் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் மற்ற எல்லோரும்  ஆண்ட பரம்பரை என கூறிவரும் சத்திரியர்களாக இருந்தாலும் அனைவரும் பார்ப்பனர்களுக்கு கீழ் தான் என ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கிளை இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு. பாரதிய ஜனதா கட்சிக்கு என கொள்கை கோட்பாடுகள் கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை தான் இவர்கள் பின்பற்றி வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக உருவாக்கிய அமைப்புதான் ஜனசங்கம் ஆனால் அவை மக்களிடம் எடுபடவில்லை. இந்தியா அனைத்து மதங்களையும் அனைத்து கலாசாரங்களைப் பின்பற்றும் கூடியது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரே மதம் தான் இருக்க வேண்டும் என பாரதிய ஜனதா கருத்து நியாயமானதா? ஒரே மதம், ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என ஒரே நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தில்தான் தற்போது இந்தி திணிப்பை முன்னெடுத்து வருகிறது என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.


திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது:- திராவிட மாடல் என்றால் பெண்கள் கையில் பதவி இருப்பது தான். ஆனால் அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்க்கு என்று பேசி வருவது தான் பாரதிய ஜனதா கட்சி. பார்ப்பனர்கள் தனக்கு கீழே இருக்கும் ஜாதிகளை அவர்கள் யாரும் படிக்கக் கூடாது படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும், அத்துமீறி படித்தால் கடுமையான தாக்குதல் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள். நூறு வருடம் ஆனாலும் பாஜக கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆட்சி செய்ய முடியும் என பேசினார்.




மேலும், முன்னதாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் 18ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்ற முஸ்லிம்களின் நோன்பை முடித்து வைத்து அவர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினர். மேலும் நோன்பு திறக்க வந்திருந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் நோன்பு கஞ்சி, பேரிச்சம்பழம், குளிர்பானங்கள் ஆகியவை வழங்கப்பட்டது.