நடிகை, இயக்குனர் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் என, பன்முகதன்மை கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பாஜகவில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “நான் பாஜகவில் சேரவே இல்லை. பின்பு எப்படி வெளியே வர முடியும்?. நான் எந்தக் கட்சியிலும் இல்லை, நான் எந்தவொரு பக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், எனது பார்வையின் அடிப்படையில் நல்லதாக இருந்தால் பராட்டுகிறேன்; தவறாக இருந்தால் விமர்சிக்கிறேன். எனக்கு அரசியல் தொடர்புகளோ ஆதரவோ இல்லை, அரசியலில் நுழையும் திட்டமும் இல்லை, நான் ஆன்மீகத்தை தொடர விரும்புகிறேன். மத அடையாளங்களை அல்ல என, லட்சுமி ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டிவிட்டர் பதிவில் தனியார் தொலைக்காட்சிக்கு தான் அளித்த பேட்டியை திரித்து தலைப்பு இடப்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த பேட்டியில் பாஜகவில் தொடர்ந்து பாலியல் தொல்லை தொடர்பான வீடியோ, ஆடியோக்கள் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அந்த கட்சியில் பெரும் தலைவர்கள் எல்லாம் இருந்துள்ளனர். இப்போது இதுபோன்று நடப்பது வேதனையாக உள்ளது. பாஜகவில் இருந்து தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவருவது வருத்தம் அளிக்கிறது என லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இதேபோன்று, பாஜக தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து இருந்தார். இந்நிலையில், அந்த பேட்டிக்கு தவறான தலைப்பு கொடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.