மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக கட்சி சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சீர்காழி  நகர் கழக செயலாளர் வினோத்  தலைமையில் நடைபெற்றது.




இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்கு கட்சியினர் பலரும் ஏராளமான பேனர்கள் வைத்திருந்தனர். அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.வி.பாரதி உள்ளிட்டோர் படங்கள் அனைத்தும் பேனர்களில் இடம்பெற்றன. ஆனால் முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் சக்தி சார்பில் பொதுக்கூட்டம் மேடை அருகில் வைக்கப்பட்ட பேனரில் மட்டும் மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி.பாரதி புகைப்படம் இடம் பெறவில்லை.




இதேபோன்று பொதுக்கூட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட அதிமுக கழக மாவட்ட செயலாளரும், தற்போதைய வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூட்டத்திற்கு வருகையில், மேடை முழுவதும் கட்சி பொறுப்பாளர்கள் அமர்ந்திருந்தனர். இதனால் மேடையில் ஏறி அமராமல், பொதுமக்களுடன் மேடையின் எதிரே போடப்பட்ட சேரில் அமர்ந்தார். தொடர்ந்து  கட்சியினர் மேடையில் ஏறி அமர கூறியும் மறுத்து மேடைக்கு கீழ் அமர்ந்தார். பின்னர் 8 மணிக்கு மேடை அருகே வந்த ஓ.எஸ்.மணியன் வந்தார்.  தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேல் பேசினார்கள். இரவு 10 மணியை கடந்து பலர் பேசியதால் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் அங்கிருந்து நடையை கட்டினர்.




பின்னர் இறுதியாக ஓ.எஸ்.மணியன் பேச அழைத்தார். இதனைத் தொடர்ந்து மேடையில் ஏறிய அவர், இனிவரும் காலங்களில் உங்களை காக்க வைக்காமல் முன்னதாகவே நான் பேசுகிறேன் என கூறி தொடர்ந்து பேசாமல் தனது பொதுக்கூட்ட நிகழ்வை முடித்துக்கொண்டார். பொதுவாக ஓ.எஸ்.மணியனின் பேச்சு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், எதிர்கட்சியை கடுமையாக விமர்சித்தும் இருக்கும். இதனால் அவரது பேச்சை கேட்க பலம் எதிர்பார்த்த நிலையில் அவர் பேசாமல் சென்றது ஏமாற்றத்தை அளித்தது.




மேலும், இதனை கண்ட தொண்டர்கள் சிலர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக சீர்காழி அதிமுக கட்சியினர் இடையே  உட்கட்சி பூசல் உள்ளதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்கப்படவில்லை என்றும், எம்எல்ஏ சீட்டு பெறுவது தொடர்பாக முன்னாள் எம்எல்ஏக்கள் ஆன பாரதி சக்தி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், அதன் காரணமாகவே முன்னாள் எம்எல்ஏ சக்தி, பொதுக்கூட்டத்திற்கு வைத்த பேனரில் மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவர் பாரதியின் புகைப்படம் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் அதிமுக இடையே மேல்மட்டத்தில் வெளிப்படையான கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில் மாவட்டங்களிலும் இதுபோன்ற உட்கட்சி பிரச்சனை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.