குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை தேனிக்கு பதில் திருச்சியில் நடத்த சொன்னதாக வெளியான அறிவிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் மாற்றம் ?


மாநில அளவிலான குடியராசு தின தடகள போட்டிகள் 14, 17, 19 வயது பள்ளி மாணக்கர்களுக்கு தனித்தனி பிரிவுகளாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது. அதனடிப்படையில் தடகள போட்டிகள் செங்கல்பட்டிலும் கோவையில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான பாராதியார் குழு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. டிசம்பர் 2ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை தேனியில் 17 வயதிற்குட்பட்டோருக்கான விளையாட்டு  போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் உடற்கல்வி ஆசிரியர்களும் தேனிக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் இந்த போட்டிகள் தேனிக்கு பதில் திருச்சியில் நடைபெறும் என திடீரென அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலால் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


தங்க தமிழ்செல்வன் தலையீடு காரணமா ? 


தேனியில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றால் போடிநாயக்கனூர் எம்.எல்.ஏவும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தையும் தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தையும் அழைத்து அரசு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதால், தேனி மாவட்ட  திமுக செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் தேனியில் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டாம் என்றும் அதற்கு பதில் வேறு ஒரு மாவட்டத்தில் நடத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.


அதனடிப்படையிலேயே 17 வயதிற்குட்பட்டோருக்கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான திருச்சி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


தங்க தமிழ்செல்வன் Vs ஓபிஎஸ்


அதிமுகவில் இருந்தபோதே எதிரும் புதிருமாக இருந்த தங்க தமிழ்செல்வனும் ஓபிஎஸ்க்கும், தங்க தமிழ்செல்வன் திமுகவில் இணைந்த பிறகு ஒற்றுமையாகியதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ் தாயார் மறைந்த போதும், தன்னுடைய இல்லத் திருமணத்தின்போதும் தங்கதமிழ்செல்வன் நேரடியாக ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். ஆனால், தற்போது ஓபிஎஸ் அதிமுக பெயரை கொடியை பயன்படுத்த கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேனியில் தன் கொடியை பறக்க விட தங்கதமிழ்ச்செல்வன் முடிவு எடுத்திருப்பதாகவும் ஓபிஎஸ்-சை மொத்தமாக ஓரங்கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் நீட்சியாகவே, தேனியில் நடைபெறவிருந்த மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளை ஓபிஎஸ்-சை அழைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வேறு மாவட்டத்தில் நடத்திக்கொள்ளும்படி தங்கதமிழ்ச்செல்வன் வலியுறுத்தியதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் காரணத்திற்காக மாணவர்களை அலைகழிக்கலாமா என்ற கேள்வியும் ஆசியர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.  டிசம்பர் மாதம் தேனி செல்ல மாணவர்களும் ஆசியர்களும் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த திடீர் மாற்றம் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது


விளக்கம் என்ன ?


இது குறித்து விளக்கம் கேட்க தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனை தொடர்புகொண்டபோது, அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. பள்ளி கல்வித் துறை இயக்குநர் அறிவொளியை தொடர்புகொண்டபோது தான் வெளியில் இருப்பதாகவும் விசாரித்து சொல்வதாகவும் தெரிவித்தார். இருவரும் தங்கள் விளக்கத்தையும் காரணத்தையும் சொல்வதோடு போட்டிகள் உண்மையிலேயே தேனி மாவட்டத்திற்கு பதில் திருச்சிக்கு மாற்றப்பட்டிருக்கிறதா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.