பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தொலைக்காட்சி விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டி பதிலளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் `போரை விட பேச்சு வார்த்தை சிறந்தது’ என்ற கருத்தைத் தானும் ஒப்புக் கொள்வதாகவும், எனினும் இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களில் எந்தப் பிரச்னையும் முடிவுக்கு வந்தது இல்லை எனவும், கூடுதலாக வளர்ந்துள்ளன என்றும் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.


கடந்த பிப்ரவரி 23 அன்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்க்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதத்தில் ஈடுபட விரும்புவதாகக் கூறியிருந்தார். `நான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுக்க விரும்புகிறேன்’ எனக் கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்த விவாதத்தின் மூலம் இரு நாடுகளையும் சேர்ந்த நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவித்தார். 



ரஷ்யாவில் மாஸ்கோவில் முதல் முறையாக இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி நிறுவனமான ஆர்,டியில் இதனைக் கூறியிருந்தார். அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பல்வேறு சர்வதேச விவகாரங்களை விவாதிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 






பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த நேர்காணலுக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்திய மக்களவை எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், `டியர் இம்ரான் கான், போரை விட பேச்சுவார்த்தை சிறந்தது என்பதில் உடன்படுகிறேன். ஆனால் இந்தியத் தொலைக்காட்சி விவாதங்களில் எந்த தீர்வும் கொண்டுவரப்பட்டதில்லை; பிரச்னை மேலும் வளர்க்கப்பட்டிருக்கிறது’ என்று பதிவிட்டுள்ளார். 



தொடர்ந்து அவர், `எங்கள் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் சிலர் தங்கள் டிஆர்பி அதிகரிக்கும் என்றால் மூன்றாம் உலகப் போரை மூட்டிவிடவும் மகிழ்ச்சியோடு தயாராக இருக்கிறார்கள்’ என்றும் கூறியுள்ளார்.