மேற்கு வங்கத்தின் பிர்பம் மாவட்டத்தில் உள்ள தேயுச்சா பசமி பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடிகள் போராட்டம் நடத்திய நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளுக்கான நிதியுதவியை அதிகரித்து அறிவித்துள்ளார். 


மேற்கு வங்கத்தின் தேயுச்சா பசமி பகுதியில் நாட்டிலேயே மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை அமைக்கவுள்ளதாகவும், அது தடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அப்பகுதியைச் சேர்ந்த பழங்குடிகளும், பிற மக்களும் தவறாக வழிநடத்தப்படுவதாகவும், தேயூச்சா பசமி எதிர்காலத்தில் மேற்கு வங்கத்தின் அடையாளமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



கடந்த பிப்ரவரி 21 அன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, `நான் ஏழைகளை அழிக்க எதனையும் செய்தது இல்லை. தேயூச்சா பசமி, முகமது பஜார் பகுதி மக்களுக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், நான் அவர்களுள் ஒருவருக்கும் அநீதி இழைக்க மாட்டேன். தங்கள் நிலங்களை வழங்க முன்வரும் மக்களுக்குப் பணி வழங்கப்படும்; மேலும், நிலத்தின் மதிப்பு இரட்டிப்பாக அளிக்கப்படும். நான் எதையும் வலுக்கட்டாயமாகத் திணிக்க மாட்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில குவாரி உரிமையாளர்கள் தங்கள் தனிநலனுக்காக இந்த விவகாரத்தில் தலையிடுகிறார்கள். தங்கள் சட்டவிரோத குவாரிகள் மூடப்பட்டதால் அவர்கள் குழப்ப நிலையில் இருக்கிறார்கள். நாம் நிலத்தைப் பெற்றுக் கொண்டு நிலம் வழங்குவதோடு, வீடும் கட்டி வழங்குகிறோம்’ எனக் கூறியுள்ளார். 


மேற்கு வங்க மாநில அரசு தேயூச்சா பசமி திட்டத்திற்காக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்காக நிலம் வழங்க முன்வருபவர்களுக்கு அதன் சந்தை மதிப்பில் இருந்து இரண்டு மடங்காக பணம் வழங்கப்படும் எனவும், 100 சதவிகித இழப்பீடு வழங்கப்படும் எனவும் மேற்கு வங்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று மேற்கு வங்க அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. 


மேலும், இந்தத் திட்டத்திற்காக வீடுகளை ஒதுக்க முன்வருபவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக 700 சதுர அடி வீடுகள் கட்டித் தரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு சார்பில் கட்டித் தரப்படும் வீட்டின் அளவு 600 சதுர அடிகளாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது இது உயர்த்தப்பட்டுள்ளது; மேலும், வீடு பெற்றுக் கொள்வதற்குப் பதிலாக பணம் பெற்றுக் கொள்ள விரும்புபவருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்த நிலையில், அது தற்போது அதிகரிக்கப்பட்டு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 



வீடுகளையோ, நிலத்தையோ அளிக்க முன்வருவபர்களின் குடும்பத்திற்கு காவல்துறையில் காவலர் பணி வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது தகுதியுள்ளவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப காவல்துறையிலோ, பிற துறைகளிலோ வேலை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்காக மாநில அமைச்சரவை சுமார் 5100 காலியிடங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 


தேயூச்சா பசமி நிலக்கரி திட்டத்திற்கு மொத்தம் 3400 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் மாநில அரசின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.