நீட் தேர்வு மோசடி விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இந்த நிலையில், இந்த விவகாரத்தை இந்தியா கூட்டணி நாளை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இன்று உரையாற்றிய நிலையில், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நாளை நடைபெற உள்ளது.


ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர இந்தியா கூட்டணி திட்டம்: இருப்பினும், நீட் விவகாரத்தை முன்னிறுத்தி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி தர இந்தியா கூட்டணி திட்டமிட்டு வருகிறது. விவாதத்தின் போது நீட் தொடர்பாக எந்த கேள்விகள் எழுப்பப்பட்டாலும் அதற்கு பதில் அளிக்க பாஜக அரசு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து அரசு தரப்பில் ஒருவர் கூறுகையில், "நீட் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது முதல் முதல் சிறப்புக் குழுவை அமைத்தது வரை அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நீட் முறைகேடு தொடர்பான சிறப்பு குழுவின் அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடப்பு நாடாளுமன்ற அமர்வில் நீட் மோசடி மற்றும் வினாத்தாள் கசிவுக்கு எதிரான கடுமையான விதிகள் அமலுக்கு வருவதால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வலுவான கல்வி முறைக்கு அடித்தளம் அமைக்கப்படும். இந்த விவகாரம் நாளை எழுப்பப்படும் பட்சத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதற்கு பதில் அளிப்பார்" என்றார்.


பூதாகரமாக வெடித்த நீட் சர்ச்சை: கடந்த திங்கள்கிழமை, தர்மேந்திர பிரதான், எம்.பி.யாக பதவியேற்கும்போது எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 


கடந்த 2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான 4ஆம் தேதி இரவே தேர்வு முடிவுகளும் வெளியாகின. 


இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றனர். சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது, ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என நீட் இளநிலைத் தேர்வில் ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின.


முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை முதலில் மறுத்தது. ஆனால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.