பல்கலைக்கழக வேந்தருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் துணை வேந்தர் நியமனம் குறித்த யுஜிசியின் புதிய வரைவு அறிக்கைக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அமைதியாக இருக்காது என்று கூறியுள்ள அவர், சட்ட ரீதியாகவும் அலுவல் ரீதியாகவும் போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநருக்கு அதிக அதிகாரம் தரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இது அரசமைப்புக்கு எதிரானது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ள நிலையில், யுஜிசி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது.


மாநில அரசுகளைத் தாழ்த்தும் செயல்


இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சிக்கும் எதிரானது, ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள இந்த  நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தி, மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளைத் தாழ்த்தும் செயல் ஆகும்.


இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அமைதியாக இருக்காது. இதை எதிர்த்து சட்ட ரீதியாகவும் அலுவல் ரீதியாகவும் போராடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார். 






நடந்தது என்ன?


யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு, UGC (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியில் தரநிலைகளை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) வரைவு விதிமுறைகள், 2025-ஐ நேற்று (ஜனவரி 6) வெளியிட்டது. இதில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கருத்துகள்/ பரிந்துரைகளைத் தெரிவிக்கலாம் என்று யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.


துணை வேந்தர் நியமனத்தில் புதிய பரிந்துரைகள்


இதில் துணை வேந்தர் நியமனம் குறித்த புதிய பரிந்துரைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவின் (Search- cum- Selection Committee) தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யுஜிசி பரிந்துரைப்பவரும் இருப்பார்கள் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.


மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக சிண்டிகேட் அல்லது செனட் அல்லது நிர்வாகக் குழு அல்லது மேலாண்மை உறுப்பினர் பரிந்துரைப்பவர் இருப்பார் என்றும் யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் யுஜிசியின் வரைவு அறிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.