அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதனிடையே முன்கூட்டியே ரெய்டு தகவல் முன்னாள் அமைச்சருக்கு தெரிந்திருக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஆர்.காமராஜ் வீடு மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்கள் வீடு உட்பட 49 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.


மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சத்தியசீலன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் வந்து லஞ்ச ஒழிப்பு சோதனையை தொடங்கினர். அதேபோல, மன்னார்குடி முதல் தெருவில் உள்ள அ.தி.மு.க. நகர செயலாளரும், ஆர்.காமராஜின் உறவினரான ஆர்.ஜி.குமார், வேட்டை திடலில் உள்ள காமராஜின்  நண்பர் சத்தியமூர்த்தி வீடு, தஞ்சாவூரில் உள்ள ஆர்.காமராஜ் சம்மந்தியின் வீடு, தஞ்சையில் காமராஜ் புதிதாக கட்டி வரும் மருத்துவமனை, சென்னையில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது.


58 கோடிக்கும் அதிகமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இன்பன், இனியன் மற்றும் காமராஜின் சம்பந்தி ஆகியோரது வீடு, அலுவலகங்கள் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருவதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ஒருப்பக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் இன்று ரெய்டு நடைபெறும் தகவல், நேற்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தரப்புக்கு தெரிந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனால்தான் ரெய்டு தகவல் அறிந்து விமான டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டதா எனவும் கேள்வி எழுந்துள்ளது.