இந்தியன் ஐ-லீக் கால்பந்து தொடர் கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் மிகவும் முக்கியமான தொழிற்முறை கால்பந்து தொடர் இதுவாகும். இதில் தற்போது 21 கிளப் அணிகள் பங்கேற்று வருகின்றன. 2020-21ஆண்டிற்கான ஐ-லீக் தொடரை கோகுலம் கேரளா எஃப்சி அணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த ஐ-லீக் தொடருக்கான வீரர்கள் ஒப்பந்தம் செய்யும் படலம் தற்போது நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் நெரோகா எஃப்சி (North East Reorganising Cultural Association (Neroca)) என்ற கால்பந்து அணி தமிழ்நாட்டு முதலமைச்சரின் பேரனும் எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பன் உதயநிதியை ஒப்பந்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக அறிவிப்பை தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. நெரோகா அணியின் வீரர்கள் தேர்விற்கான ட்ரையல்ஸில் இன்பன் உதயநிதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்பன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக இருந்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள மேக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்பன் உதயநிதி தேர்வானது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாளிதழின் 12வது பக்கத்தில் கட்டம் கட்டி போடப்பட்டுள்ள அந்த செய்தியில், இன்பனின் தனிப்படமும், தந்தை உதயநிதி உடன் இருக்கும் படமும் செய்தியில் இடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பேரன்... உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.,வின் புதல்வர் என்ற தலைப்போடு அந்த செய்தி இடம் பெற்றுள்ளது.
இதன் மூலம் முரசொலியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதியை அடுத்த நான்காம் தலைமுறையாக இன்பன் உதயநிதியின் செய்தியும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் தனி செய்தியாக இன்பன் உதயநிதி இடம் பிடித்துள்ளார். அரசியல் தொடர்பான செய்தி இல்லை என்றாலும், அரசியல் பேசும் நாளிதழில் வந்திருப்பதால் கவனம் பெறுகிறார் இன்பன் உதயநிதி.