யார் முதுகிலும் சவாரி செய்யாமல், தனித்து போட்டியிட்டு பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியுமா ? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.



முதல்வர் மு.க.ஸ்டாலின்


PTI செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது மட்டுமின்றி இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த பேட்டியில் விரிவாக பதிலளித்துள்ளார்.



பிரதமர் மோடியுடன முதல்வர் மு.க.ஸ்டாலின்


குஜராத் தேர்தல் வெற்றி, தேசிய அளவில் எதிரொலிக்காது


குஜராத் பாஜக தேர்தல் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு மாநில தேர்தல் முடிவுகள் அடிப்படையில் ஒட்டுமொத்த நாட்டின் மனநிலையும் தீர்மானிக்க முடியாது என்றும் குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றியிருந்தாலும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது. எனவே, நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவு மாறுபட்டு இருப்பதை இதன்மூலம் எளிதில் புரிந்துக்கொள்ள முடியும் என பதில் அளித்துள்ள மு.க.ஸ்டாலின், குஜராத் தேர்தல் வெற்றி தேசிய அளவில் எதிரொலிக்காது என்று தீர்க்கமாக கூறியுள்ளார்.


 தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளதா ? முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்


தமிழ்நாட்டில் பாஜக ஒரு ராட்சசனைபோல வளர்ந்து வருகிறது என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சமீபத்தில் பேசிய நிலையில், அதற்கு எதிர்மாறான கருத்தை தன்னுடைய பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில், திமுகவோ, மக்களோ பாஜக-வை முதன்மையான எதிர்க்கட்சியாக பார்க்கவில்லையென்றும், 2001ல் திமுக தோளிலும் 2021 அதிமுகவின் தோளிலும் சவாரி செய்தே தன் கட்சிக்கு எம்.எல்.ஏக்களை பாஜக பெற்றுள்ளது எனவும் அந்த பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.


அதோடு, தமிழ்நாட்டில் பாஜக தனித்து நின்றால், அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும். தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதைபோல ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற திமுக அணிகளின் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறுவதற்கு எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என்றும் அதனால் இப்போதே கவனமாக களப்பணியை துவக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்த நிலையில், பிடிஐ பேட்டியிலும் அதிமுகவை கட்டுப்படுத்தி தமிழகத்தில் பாஜக வளர நினைக்கிறது என விமர்சித்துள்ளார்.


பிரதமராகும் எண்ணமா எனக்கு ? – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓபன் டாக்


சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளிலும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் திருச்சி சிவா போன்ற எம்.பிக்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக உள்ளார் என்றும் மிக விரைவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் முதல்வர், செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவார் என்றும் பேசி அவருக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக கூறி வந்தனர்.


இந்நிலையில், தேசிய தலைவராகும் எண்ணமுள்ளதா என்ற கேள்விக்கு பிடிஐ பேட்டிக்கு பதில் அளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி சொன்னதைபோலா, என் உயரம் எனக்கு தெரியும் என்றும் எனது பலம் எது பலவீனம் எது என்பதை நான் அறிவேன் என்றும் பதில் அளித்துள்ளார். அதோடு, தேசிய அளவில் சமூக நீதிக்கான முயற்சியை திமுக எடுத்துள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


ஆளுநர் கருத்தை விமர்சித்த முதல்வர்


அதோடு, கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆளுநர் தெரிவித்த கருத்தை விமர்சிக்கும் வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். அதில், கோவை வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்ட கருத்து அவசியமற்ற, அவசரமான கருத்து என்றும் ஐ.பி. எஸ் அதிகாரியாக இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட நபரே இப்படி ஒரு கருத்தை சொல்கிறாரே என ஆதங்கப்பட்டேன் எனவும் தனது பேட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.



ஆளுநருடன் முதல்வர்


 வலதுசாரிகள் பிற்போக்குவாதிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்


திராவிட மாடல் ஆட்சி என்பது இந்துக்களுக்கு தமிழர்களுக்கு எதிரானது என்ற கருத்தை முன் வைத்து வலதுசாரிகள் பேசிவருகிறார்களே என்ற கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்போக்குவாதிகளான வலதுசாரிகள் எங்களை விமர்சிக்கிறார்கள் என்றால் நாங்கள் சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் என கூறியுள்ளார்.  அதோடு இப்படியான பொய் பிரச்சாரத்தை அவர்கள் தான் மேற்கொள்வார்கள் என்றும் அந்த பேட்டியில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.