நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்று கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கட்சியில் இணையும் விழா பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சேது சமுத்திர திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளது. சாதாரண மனிதன் கூட பாஜக கருத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு விட்டனர். சேது சமுத்திர திட்டத்தை பற்றி யாரும் வாய் கூட திறக்கவில்லை.
பாஜக வைத்திருக்கும் கேள்விகளுக்கு மாநில அரசு இதுவரை பதில் கூட சொல்லவில்லை. இதுதான் திமுகவின் நிலைமை.. பெயருக்காக எதையாவது திசை திருப்புவற்காக ஒரு திட்டத்தை கொண்டு வருவது. அது சாத்தியம் இல்லை என பாஜக தலைவர்கள் சொல்லும் போது அதை கிடப்பில் போட்டு விட்டு அடுத்த விசயத்தை நோக்கி செல்ல வேண்டியது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கவிருக்கிற து. அதற்கு திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வேட்பாளரை களம் இறக்கி உள்ளனர். ஆட்சிக்கு வந்து 20 மாத காலம் ஆகி இருக்கும் திமுக இன்னும் வேட்பு மனு தாக்கலே ஆகவில்லை அதற்குள் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். அதை பார்க்கும் பொழுது திமுகவிற்கு எந்த அளவிற்கு தோல்வி பயம் வந்திருக்கிறது என தெரிகிறது. அதே நேரம் எந்த கட்சியில் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறார்களோ அந்த கட்சியின் மாவட்ட தலைவரே தங்கள் அதிருப்தியை தெரிவிக்கிறார். இதையெல்லாம் மறைப்பதற்காகவே திமுக கபட நாடகம் ஆடுகிறது.
நெல்லை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. 2022 ஜீன் மாதம் பிரதமர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த 500 நாட்களில் மத்திய அரசு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் என சொல்லியிருந்தார். இப்பொழுது 3 தவணைகளாக வேலைவாய்ப்பிற்கான கடிதத்தை மத்திய அரசு அனுப்பி உள்ளது. 10 லட்சத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பிற்கான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 12 மாதங்களில் 8 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பை கொடுப்பதை மத்திய அரசு பூர்த்தி செய்யும்.
திமுகவின் மிக முக்கிய பொறுப்புக்கு வர வேண்டும் என்றால் கல் எடுத்து அடிக்க வேண்டும் போல தெரிகிறது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் புலி வேகத்தில் பாய்ந்து கல் எடுத்து அடிக்கப்போனது தான் திமுக அரசு 20 மாதங்களாக செய்வதை காட்டுகிறது. பட்டப்பகலில் ஒரு அமைச்சர் அடிக்க போவது புதிது கிடையாது. நிறைய குளறுபடிகள் செய்துள்ளனர். நிறைய தப்பான விசயங்களை தவறுதலாக சொல்லி இருக்கிறார். இன்று திமுக அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர், இடைத்தேர்தலை பொறுத்தவரை 80 சதவிகிதம் ஆளும் கட்சியினர் வெற்றி பெற்று உள்ளனர். காரணம் ஆளும் கட்சியின் பண பலம், படை பலம், அதிகாரிகளை தவறுதலாக பயன்படுத்துவது என உள்ளது,
பாஜகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதிமுகவில் அவர்களின் உட்கட்சி பிரச்சனையை தொண்டர்கள் சேர்ந்து முடிவு எடுக்கின்றனர். இதில் நாங்கள் சொல்வதற்கு இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை அதற்குள் ஒரு பிரிவு இருக்க கூடாது என்பது தான். தேர்தல் அறிக்கையில் அரசு வேலையில் திமுக அரசு 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை கொடுப்பதாக சொல்லியிருந்தனர். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடம் ஆக போகிறது. இன்று 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தமிழக அரசு வேலை கொடுத்திருக்க வேண்டும். ஆனால் குரூப் 4 இல் 7 ஆயிரம் பேருக்கு நடந்த தேர்வு முடிவுகளை ஆறு மாதம் ஆகியும் இன்னும் அறிவிக்க முடியவில்லை. அப்படியிருக்கும் போது திமுகவின் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு வேலை என்பது நிச்சயமாக அவர்களால் கொடுக்க முடியாது.
அதேபோல நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் தனியார் வேலை வாய்ப்பு 50 லட்சம் உருவாக்குவோம் என்று. அப்படியென்றால் வருடத்திற்கு 10 வருடம். இதே போல பிரதமர் கூறியது, 2022 ஜீன் இல் சொல்லும் போது டிசம்பர் 2023 முடியும் போது 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று. அது நிறைவேறும் என்றார். 2026 இல் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் செயல்பட துவங்கும். அதற்கு அமைச்சர் பார்லிமெண்டில் விரிவாக பதில் சொல்லியிருந்தார்.
அதில் எந்தவிதமான மாறுதலும் இல்லை. திமுக அரசு மருத்துவத்துறையில் நம்பர் 1 என சொல்லுகிறார்கள். ஆனால் இப்போ எய்ம்ஸ் வந்தால் தான் தமிழ்நாடு தப்பிக்கும் என ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார். இந்த இடைத்தேர்தல் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயமில்லை. அதிமுக பிரதான கட்சியாக உள்ளது பலம் வாய்ந்த வேட்பாளரை ஆதரித்து திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே நோக்கம்.
தேர்தல் ஆணையம் பறக்கும் படை போன்றவைகளை அமைத்தாலும் அமைச்சர்கள் 20 மாதங்களாக சம்பாதித்த பணம் வெளியே வரத்தான் போகிறது அதை நீங்களும் பார்ப்பீர்கள். குடியரசு தினவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விடுதலை சிறுத்தை கட்சி தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, கடந்த முறை சொன்னதையே இப்போதும் கூறுகிறேன். டீ செலவு மிச்சம்” என விமர்சித்தார்.