தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் முதலாமாண்டு திதி நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தலைவர்கள் பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பெரியகுளம் வந்திருந்தார். அவர் மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசுகையில், ”தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அவர்களை நயவஞ்சகமாக கூட்டு சேர்த்து பின்னர் காலை வாரி விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் உடன் இருந்த செம்மலை உட்பட யாருக்கும் சீட் தராமல் ஏமாற்றியுள்ளார். இனியாவது அவர் திருந்த வேண்டும். இல்லையெனில் ஒன்றரை கோடி தொண்டர்கள் சேர்ந்து அவர்களை திருத்த வேண்டும். குறிப்பாக தொண்டர்களை குழப்ப வேண்டாம் என்று எடப்பாடியிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எடப்பாடி உட்பட அனைவரும் ஒதுங்கி விடுங்கள். ஓபிஎஸ் தலைமையில் கட்சியை நாங்கள் நன்றாக வழி நடத்துகிறோம். தற்போதைய நீதிமன்ற தீர்ப்பு ஒன்றரை கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் ஆறு கோடி மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. எனவே ஓபிஎஸ் அவர்கள் நடந்தவற்றை மறந்து விட்டு அனைவரும் ஒன்றாக இருந்து கட்சியை நன்றாக வழி நடத்தி எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்.
எடப்பாடி எந்த வேலையும் செய்யவில்லை. தேர்தல் நேரத்தில் தென் மாவட்டங்களில் பரப்புரை நிகழ்த்தவில்லை. ஓபிஎஸ் ஜானகி அணியை சேர்ந்தவர் என்று கூறுகின்றனர். ஆனால் தம்பிதுரை, வளர்மதி, உசேன், சி.வி சண்முகம் ஆகியோர் அனைவரும் ஜானகி அணியை சேர்ந்தவர்கள் தான். எனவே அவர்களை நீக்குவாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசுகையில், ஜெயலலிதா இருந்த போது ஓபிஎஸ் அவர்களை நிகழ்கால பரதன் என்று குறிப்பிட்டுள்ளார். உதயகுமார் நேரத்திற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொண்டு பேசி வருகிறார். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அவருக்கு 45 சதவீதம் பேர் ஆதரவாக இருந்ததால் அவரை நயவஞ்சமாக கூட்டு சேர்த்து எடப்பாடி முதலமைச்சராகி விட்டார்.
பின்னர் ஓபிஎஸ் அய்யாவின் காலை வாரி விட்டுள்ளார். எனவே இவர்கள் அனைவரும் ஒதுங்கி விட்டால் ஓபிஎஸ் தலைமையில் கட்சியை வழிநடத்தி திமுகவை வீழ்த்துவோம் என்றார். அதிமுக கட்சி அழிவு பாதைக்கு செல்கிறது என்றால் அதற்கு எடப்பாடியுடன் உள்ள எட்டப்பன் கே. பி. முனுசாமி தான் காரணம். வாய் தான் அவருக்கு மூலதனம். அவர் ஏதேனும் கூறி குழப்பி கட்சியை அழிக்க பார்க்கிறார். அவர் நேருக்கு நேர் பேச தயாரா?.” என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி இல்லாமல் டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை வைத்து கட்சியை நடத்துவீர்களா? என்று கேட்டதற்கு ஓபிஎஸ் என்ன கட்டளையிடுகிறாரோ? அதன்படி செய்ய அனைத்து தொண்டர்களும் காத்திருப்பதாக கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்