அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலத்தில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், " பாஜக எதிர்ப்பு மனநிலையை மக்களிடம் உருவாக்கவே நீட் விவகாரத்தில் திமுக நாடகமாடி வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினார். தமிழக அமைச்சரவை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட நீட் மசோதாவை தமிழக ஆளுநர் இரண்டு கேள்விகளைக் கேட்டு நிராகரித்து அனுப்பியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தின்படி, தமிழக ஆளுநர் அந்த மசோதாவையும் திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டு. அதன்படியே ஆளுநர் செய்துள்ளார்.


திமுக முதலில் அந்த இரண்டு கேள்விகளுக்கும் தெளிவான பதிலை கூற வேண்டும். நீட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இந்த மசோதா அமைந்துள்ளது. அதேபோல, கிராமப்புற மாணவர்கள் பயனடையும் வேண்டும் என்பதற்காக, நீட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவும், இந்த மசோதா அமைந்துள்ளது. ஆகவே, இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விளக்கம் இல்லாமல், இந்த நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினாலும் கூட, திருப்பி அனுப்பவே வாய்ப்பு உள்ளது.



மேலும், மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு நீட்டுக்கான அறிவிப்பு வந்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உள்பட 80 வழக்கு தொடுக்கப்பட்டன. அதில், 2013 ஆம் ஆண்டு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை அப்படியே விடாமல், தீர்ப்பை எதிர்த்து மீண்டும் 2013-ஆம் ஆண்டிலேயே அப்போதைய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு நீட் தேர்வு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது.


ஆகவே, திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே நீட்டை கொண்டு வந்தது. ஆனால், தற்போது ராகுல் காந்தி நீட்டுக்கு எதிராக பேசி வருகிறார். அதே போன்று, திமுகவும் நீட் விவகாரத்தில் நாடகமாடி வருகிறது. தமிழகத்தில் நீட்டால் ஏற்படும் மாணவர்கள் உயிரிழப்புக்கு திமுகவே பொறுப்பாகும். குறிப்பாக, மக்களிடம் பாஜக எதிர்ப்பு மனநிலையை உருவாக்கவே, திமுக நீட் விவகாரத்தில் தொடர்ந்து நாடகமாடி வருகிறது. தொடர்ந்து இந்த கருத்தை பரப்பி வருகின்ற திமுக, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான மனநிலைக்கு மக்கள் வர வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்து வருகிறது.


நீட் தேர்வை காங்கிரஸ் அரசு கொண்டு வந்தபோதே, அந்த அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திமுக விலக்கியிருந்தால், நீட்டே வந்திருக்காது. நீட் தேர்வுக்கு பிறகு தமிழகத்தில் 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க அதிமுக அரசு சட்டம் இயற்றியது. இதன்மூலம் தற்போது அதிக எண்ணிக்கையிலான அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஆகவே, மீண்டும் நீட்டுக்கு எதிரான மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக, இந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இடம் கிடைப்பதற்கான வழிமுறையை திமுக சொல்ல வேண்டும் என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.