90களின் தொடக்கத்தில் நடிகையான ரோஜா, தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். 90களின் இறுதியில், பீக்கில் இருந்த நடிகை ரோஜா பொது வாழ்க்கையில் இறங்கினார். ஆந்திர அரசியலில் ஃபயர் பிராண்ட் என பெயர் பெற்ற நடிகை ரோஜா, முதலில் தெலுங்கு தேசம் கட்சியில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். சட்டப் பேரவைக்கு 2 முறை போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர், கடந்த 2014 சட்டப்பேரவை தேர்தலில் நகரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கா ரெட்டிக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் சித்தூர் மாவட்டத்தில் பெத்திரெட்டி ராமசந்திரா ரெட்டி , நாராயணசாமி ஆகிய இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத்தின் தலைவராக ரோஜா நியமிக்கப்பட்டார். இன்றுவரை அமைச்சர் பதவி வழங்கப்படும் என செய்திகள் வந்தாலும் இன்னும் எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருக்கும் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்வாரஸ்யமான விஷயங்களை ஜாலியாக பகிர்ந்துள்ளார்.
சினிமாவுக்கும், அரசியலுக்கும் வந்தது எதுவுமே திட்டமிட்டது இல்லை என்று பேசிய ரோஜா அது குறித்து விளக்குகையில், " நான் திருப்பதி காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது, ஹீரோயினுக்காக தேடி வந்தாங்க. அந்த காலேஜ்ல எல்லா பொண்ணுங்களும் அழகா இருப்பாங்க, நெறைய பேர் நடிக்க போயிருக்காங்க. அப்போ என் போட்டோவ ஆல்பத்துல பாத்துட்டு என்ன கேட்டாங்க, அப்பா ஏற்கனவே ஒரு டாகுமென்ட்ரி படம் பண்ணி நேஷனல் அவார்ட் வாங்குனவரு, அவர்கிட்ட சொன்னதும், தயவுசெஞ்சு எனக்காக நடிக்க போ ன்னு சொன்னாரு. நானும் அப்பவுக்காக நடிச்சேன், அங்க போய், நெறய விஷயம் கத்துகிட்டு ஷைன் பண்ணேன். அப்புறம் அரசியலும் அப்படிதான், அப்பா ஜெயிச்சு கட்சிய ஜெயிக்க வச்சா அப்பாக்கு மினிஸ்டர் பதவி கிடைக்கும்ன்னு சந்திர பாபு நாயுடு சொன்னாரு, 1999ல நான் நடிகையா பீக்ல இருந்த நேரம், அப்போ ஆந்திரா, தெலுங்கானா சேர்ந்த மாநிலம், அது ஃபுல்லா 30 நாள் எல்லா இடமும் பிரச்சாரம் பண்ணேன்.
எனக்கு அது புதுசாவும் இருந்தது, செட்டுக்கு போறோம், ஷூட் பண்றோம், வந்துட்றோம், இது நேரடியா மக்களை சந்திச்சு, அவங்க எவ்ளோ அன்பு வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சிக்குறது ரொம்ப ஆர்வமா இருந்துச்சு. அவ்ளோ உழச்சாதால நீயே போட்டியிடலாமேன்னு சந்திரபாபு நாயுடு 2004ல சொன்னாரு. நானும் நின்னேன், ஆனா லோக்கல்ல இருந்த அரசியல் வாதிகளுக்கு பொறாமை இருந்தது, நேரடியா முதல்வர பக்குறா, நேரடியா எலெக்ஷன்ல நிக்குறான்னு என் கிட்ட பிரச்னை இருந்ததால, ரெண்டு தடவையும் என்ன தோற்கடிச்சாங்க. அப்போதான் நான் அரசியல் வாழ்க்கைய பத்தி ரொம்ப கவலை பட்டு கும்பகோணத்துல பரிகாரம் பண்ணிட்டு இருந்தேன், ராஜசேகர் சார் கூப்டாங்க. உங்களுடைய உழைப்பு எங்களுக்கு தேவைப்படுதுன்னு சொன்னாரு.
நானும் சரின்னு சொல்லிட்டு ஷூட்டிங்ல இருந்தேன். ஒரு 10 நாள்ல இந்தமாதிரி பிளைட் கிராஷ் ஆகி இறந்துட்டாருன்னு செய்தி வருது. ரொம்ப கஷ்டமாகிடுச்சு. அப்புறம் பார்ட்டிய ஜெகன் மோகன் சார் எடுத்ததும், எல்லாரையும் கூப்பிடும்போது, என்னையும் கூப்டாங்க. அப்பா நம்புன எல்லாரையும் திரும்ப இணைக்கனும்ன்னு என்ன கேட்டாங்க, நானும் சரின்னு சொல்லி இன்னைக்கு வரைக்கும் அவர் பக்கம் நின்னுட்டு இருக்கேன். என்னை வேண்டுமென்றே தொகுதி மாற்றி மாற்றி தோற்கடித்த சந்திர பாபு நாயுடுவ நெனச்சா மட்டும் எனக்கு கால்ல இருந்து தலை வரைக்கும் கோபம் வரும். அதனால அவர் என்ன தப்பு பண்ணாலும் முதல் ஆளா வந்து பேசுறதுக்கு நிப்பேன். சட்டசபைலயும் அவரை கிழிக்குறதுதான் வேலை எனக்கு." என்று அரசியலுக்கும் சினிமாவுக்கும் காலத்தின் கட்டாயமாக வந்ததனை பற்றி குறிப்பிட்டார்.