தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான சசிகலா நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று காலை திருச்சியில் தனது ஆன்மீகச் சுற்றுப் பயணத்தை தொடங்கிய சசிகலா, முசிறி, தொட்டியம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் உள்ள கோவில்களில் சுவாமி தரிசனத்தை செய்துவிட்டு சேலம் வருகை தந்தார்.
சசிகலாவின் ஆன்மீக சுற்றுப் பயணத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் சசிகலாவிற்கு மேளதாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்தும், மலர்கள் தூவியும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பேருந்து நிலையத்தில் அமைந்து உள்ள சின்னாண்டி பக்தர் சிலை, காமராஜர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார்.
இதனிடையே எடப்பாடி பேருந்து நிலையத்திற்கு அருகில் பொது மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகையில், மக்கள் என் மீது வைத்துள்ள அன்பு அளவிட முடியாதது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை வழி நடத்தி வந்தனர். ஆரம்ப காலத்தில் இருந்து கொங்கு மண்டல மக்கள் அதிமுகவிற்கு பேராதரவு கொடுத்து வந்தீர்கள். நான் உங்களை என்றைக்கும் மறக்க மாட்டேன். எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் எத்தனையோ இடர்பாடுகள் தாண்டி வளர்ந்து வந்திருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஏழை மக்களுக்காக உழைத்தார்கள். மக்களுக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தார்கள். தொண்டர்களால் தான் இந்த இயக்கத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன் இது உறுதி. அதிமுக எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். அம்மாவின் எண்ணத்தை நிறைவேற்றாமல் நான் ஓய மாட்டேன். புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித்தலைவி பாசறையில் வளர்ந்த நான் உங்களைப் போன்ற உண்மை தொண்டர்களின் உதவியோடு கழக ஆட்சியை அமைத்து தமிழக மக்களை காத்திடுவேன் இது உறுதி என்று கூறினார்.