சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில், நடிகர் விஷால் நடித்து திரைக்கு வரவிருக்கும் ரத்னம் திரைப்படத்தின் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ரத்னம் திரைப்படத்தின் இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவர்களிடையே பேசிய இயக்குனர் ஹரி, "விஷாலுடன் முதல் 2 படம் குடும்பத்துடன் ஆக்ஷன் கலந்தபடமாக இருந்தது. தற்போது இளைஞர்களை மையமாக கொண்டு ஆக்ஷன் நிறைந்த படமாக ரத்னம் அமைக்கப்பட்டுள்ளது. சினிமாவில் நடிகர்கள் ஆக்ஷன் சீன் பண்ணுவதே கஷ்டம். ஆனால் இந்த படத்தில் பெரும்பாலும் ஆக்ஷன் சீன்தான். நல்ல பொருளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வது போலவே திரைப்பட பிரமோஷனும். வெயிலுக்கு எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கும் மக்கள் திரையரங்கம் வந்து ஏசியில் 3 மணிநேரம் அமர்ந்து ரத்னம் படம் பாருங்கள்; குடும்பத்துடன் வாருங்கள் முகம் சுளிக்கும் வகையில் எந்த காட்சியும் இல்லை. ஏதாவது பிரச்னை என்றால் ரோட்டில் இறங்கி அடிக்கணும் எனும் எனர்ஜியை கொடுக்கும் வகையில் படம் இருக்கும்" என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், "வருகின்ற 2026 அரசியலுக்கு வருவேன். இந்த கட்சியுடன் கூட்டணி, இந்த கட்சியுடன் சீட்டுகள் ஒதுக்கீடு என்பதை யோசிக்கக்கூடாது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று யோசித்தால் அதற்காக மட்டும்தான் அரசியல் கட்சி தொடங்கி செயல்பட வேண்டும். 2026 அரசியலுக்கு வருவதாக கூறுகிறேன்.. என்னை வர விடாதீர்கள். மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் நாங்கள் நடித்துவிட்டு சென்றுவிடுவோம். இதைத்தான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 2026-ல் மற்றவர்களுக்கு ஏன் வருவதற்கு வழி கொடுக்கிறீர்கள்? எல்லோரும் நல்லது செய்யத்தான் வருகிறீர்கள். நீங்கள் நல்லது செய்துவிட்டால் நாங்கள் ஏன் எங்கள் தொழிலை விட்டு அரசியலுக்கு வருகிறோம்?” என்று கேள்வி எழுப்பினார்.
”கிராம, கிராம சென்று பாருங்கள் எல்லாம் இடங்களிலும் மக்களுக்கு நல்லது நடப்பதில் குறை இருக்கிறதா? என்று பாருங்கள். இல்லை என்றால் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன். குறை இல்லாவிட்டால் ஏற்கனவே இத்தனை கட்சிகள் இருக்கும்போது ஏன் மீண்டும் இத்தனை கட்சிகள் வருகிறது?
திமுக, அதிமுக செயல்பாடு என்று குறிப்பிட்டு சொல்லவில்லை எந்த கட்சியை சார்ந்தவராக இருந்தாலும் அடிப்படை வசதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரண்டடுக்கு கட்டிடத்தில் நீச்சல் குளம் ,லண்டன் படிப்பு, சிங்கப்பூரில் சென்று மருத்துவம் உள்ளிட்டவை மக்கள் கேட்கவில்லை. மக்களுக்கு மட்டும் அரசு மருத்துவமனை. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைக்கு போகமாட்டார்கள். அவர்களுக்கு தனியார் மருத்துவமனை சிகிச்சை. இது என்ன கொடுமை!? வரிகட்டுவது மக்கள். வரிப்பணத்தில் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெறுவார்கள். ஆனால் மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
தமிழகத்திற்கு மாற்றம் என்பது நிச்சயம் தேவைப்படுகிறது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்தால், என்னைப் போன்ற வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு எங்கள் தொழிலை பார்த்துக்கொண்டு சென்று விடுவோம். நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பீர்களா என்ற கேள்விக்கு, நடிகர் சங்க பொதுக்குழுவில் மட்டும்தான் முடிவெடுக்க முடியும். முக்கிய நிர்வாகிகள் உள்ளனர் அவருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.