புதுச்சேரி செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில் கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற G20 சின்னம் காட்சிப்படுத்துதல் நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் G20 செல்ஃபி மையம் திறந்து வைத்து, வெளிப்புற விளம்பர பதாகைகள் , G20 அடையாள வில்லை , சுவரொட்டி ஆகியவற்றை வெளியிட்டார்.
ஆளுநர் தமிழிசை பேசியதாவது :-
ஜி20 மாநாடு பாரத பிரதமரின் கனவு திட்டம். ஜி 20 மாநாட்டுக்கு இந்திய தலைமை தாங்க வேண்டும் என்ற நிலை வந்த போது அது டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அத்தனை மாநிலங்களுக்கும் அதற்கான வாய்ப்பைத் தரவேண்டும் என்று வாய்ப்பு அளித்ததற்கு பிரதமருக்கு நன்றி. மற்ற நாடுகளில் மாநாடு நடைபெறும் போது அந்தந்த தலைநகரங்களில் தான் நடைபெற்றது. அதில் தொடக்க நிலையில் நடைபெறும் முதல் மாநாடு புதுச்சேரியில் நடைபெற இருக்கிறது என்பது சிறப்பு. ஜனவரி 31ம் தேதி மகாத்மா காந்தி நினைவு தினத்தோடு இணைந்து வருவது நமக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
பாரதப் பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் போகும்போது அதுபற்றி விமர்சனம் அதிக அளவில் வந்தது. ஆனால் அவர் வெளிநாடுகளுக்கு சென்றது கொரோனா நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து நமக்கு கிடைத்த உதவி, நம்மால் வெளிநாடுகளுக்கு கிடைத்த உதவி, ஜி20 மாநாட்டின் தலைமை நிலை நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு. ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் இந்தியாவின் முடிவு இல்லாமல் முடிவு எடுக்க முடியாது என்ற பிரம்மாண்டமான நிலையை மத்திய ஆட்சி இந்தியாவுக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறது. இப்போது வளர்ந்து வரும் நாடு என்ற பெயரைப் இந்தியா பெற்றிருக்கிறது. பிரதமர் இந்தியா 2030 க்குள் ஐந்து டிரில்லியன் நாடாக பொருளாதார நிலையை அடைய வேண்டும் என கடுமையான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கி நாம் பயணம் செய்ய வேண்டும். அந்த பயணம் நிச்சயமாக வெற்றிகரமாக தான் தரும் என்று சொன்னார் என கூறினார்.
மேலும் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடிகை காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராமின் குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது, நான் ஆளுநராக இருப்பதால் அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது என்று ஆளுநர் தமிழிசை கூறினார் .
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்