கடந்த ஆண்டு அதிமுகவானது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு பிரிவுகளாக பிளவுபட்ட நிலையில், இரண்டு பிரிவுகளும் அதிமுக-கட்சிக்கு உரிமை கோரி வந்தனர்.


பொதுக்குழு:


இருவர்களுக்கும் இடையில் விரிசல் நிலவி வந்த நிலையில், கடந்த  ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் சார்பில் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு:


அதன் பின்னர் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் முதலில் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இது இபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமைந்தது.


உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:


இதையடுத்து, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கானது, டிசம்பர் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொது செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த விதித்த தடையை நீடித்து, வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்.  


இந்நிலையில், இவ்வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.


ஓபிஎஸ் தரப்பு:


அடிப்படை உறுப்பினர்கள்தான் பொது செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் விதி என்றும், ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டப்பட்டது சட்டவிரோதம் என்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். ஆகையால், ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு தீர்மானத்தை ரத்து செய்து, அதற்கு முந்தையை நிலையான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிலையே தொடர வேண்டும் என தெரிவித்தனர்.


 இபிஎஸ் தரப்பு:


அப்போது, ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கு உறுப்பினர்களின் மூலம் இடைக்கால பொது செயலாளர் தேர்வானது செல்லும் என இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். திமுக-வுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுவதால நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்


நீதிபதிகள் கேள்வி:


இடைக்கால பொது செயலாளர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்றும்  விளக்கம் ஏதும் கொடுக்காமல் ஓ.பி.எஸ்-ஐ நீக்கியது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், யார் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது கருத்தில் கொள்ள தேவை இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


மேலும், வழக்கு ஆவணங்கள் தமிழில் உள்ளதால், வாதங்களை முன்வைக்க கூடுதலாக அவகாசம் வேண்டும் என இரு தரப்பு வழக்கறிஞகர்களும் கேட்டனர்.


இன்று மீண்டும் விசாரணை:


அதற்கு, தமிழ் ஒரு தனித்துவமான மொழி என தெரிவித்த நீதிபதிகள், இவ்வழக்கை இந்த வாரமே முடிக்க விரும்புகிறோம் என தெரிவித்து நாளை ஒத்திவைப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


வரும் ஜனவரி 9ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல்  சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் சட்டப்பேரவையில் ஓ. பன்னீர் செல்வத்தின் இருக்கை ஒதுக்கீடு என்பது அமையும் என்பதால் இந்த தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.