காயத்ரி ரகுராம் பா.ஜ.கவிலிருந்து விலகியதிலிருந்து அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் சேவை கட்சி/ ரசிகர் மன்ற இணையத்தள பக்கத்தை அண்ணாமலை தவறாக பயன்படுத்தி வருகிறார் என பதிவிட்டுள்ளார்.






காயத்ரி ரகுராம் பா.ஜ.க கட்சியிலிருந்து விலகுவதாக கூறி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்த பதிவில் ”பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் ஒரு வெளிநபரை போன்று விமர்சிக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன்.  கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. உண்மையாக உழைப்பவர்களை விரட்டுவது மட்டுமே அண்ணாமலையின் ஒரே குறிக்கோள். பாஜகவுக்கு எனது நல்வாழ்த்துகள். மோடி ஜி நீங்கள் சிறந்த நபர், நீங்கள் தேசத்தின் தந்தை, நீங்கள் எப்போதும் என் விஸ்வகுரு மற்றும் சிறந்த தலைவர். அமித்ஷா ஜி நீங்கள் எப்போதும் என் சாணக்கிய குருவாக இருப்பீர்கள்” என குறிப்பிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் காயத்ரி ரகுராம் டேக் செய்திருந்தார். 


“அவசர கதியில் நான் எடுத்த இந்த முடிவுக்கான பெருமை அண்ணாமலையையே சேரும். அவரை பற்றி நான் குறைவாகவே சிந்திக்க விரும்புகிறேன். அவர் ஒரு தரம் குறைந்த பொய்யர் மற்றும் அதர்மம் நிறைந்த தலைவர். கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காக என்னுடன் சேர்ந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றி மிகுந்த அன்பையும், மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன். அது ஒரு பெரிய பயணம். மற்றவர்களை காயப்படுத்துவது என்பது இந்து தர்மம் அல்ல. அண்ணாமலையின் கீழ் என்னால் தொடர முடியாது, சமூக நீதியையும் எதிர்பார்க்க முடியாது.


பெண்களே பாதுகாப்பாக இருங்கள், யாரோ ஒருவர் உங்களை காப்பாற்றுவார் என எதிர்பார்க்காதீர்கள். யாரும் வரமாட்டார்கள், நீங்கள் உங்களையே சார்ந்து இருங்கள். உங்களை நீங்களே நம்புங்கள், உங்களுக்கு மரியாதை இல்லாத இடத்தில் இருக்காதீர்கள். அனைத்து வீடியோக்களையும், ஆடியோக்களையும் காவல்துறையிடம் ஒப்படைக்க நான் தயாராக உள்ளேன். அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும். அவர் ஒரு மோசமான நபர். அதோடு, எனக்கு தொந்தரவு அளிக்கும் வார் ரூம் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்” என காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


இதனையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை,  “கட்சியிலிருந்து யார் விலகினாலும் புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கட்சியை விட்டு விலகினாலும் அவரது வாழ்க்கை நன்றாக இருக்கட்டும். கட்சியிலிருந்து பல காரணங்களுக்காக ஒருவர் வெளியேறுகின்றனர். என் மேல் புகார் அளிக்காதவர்கள் யாரும் இல்லை. புகார் அளிப்பது நல்லது தான். அது தான் பேசும் பொருளாக மாறுகிறது" என குறிப்பிட்டார்.


இந்நிலையில் காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்வீட்டில் “மக்கள் சேவை கட்சி அல்லது ரஜினி ரசிகர் மன்றம் IT- SM ஐ தமிழக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ட்ரோலுக்காக தவறாக பயன்படுத்துகிறார். தயவுசெய்து இதை கவனியுங்கள். அவர்கள் மற்ற நடிகர்களின் ரசிகர் மன்றமான SM  விளம்பரதாரர்களை அணுகுகிறார்கள். நான் உங்களின் தீவிர ரசிகர். உங்கள் ரசிகர் மன்றத்திலிருந்து பல ட்வீட்களை நான் கவனித்தேன் சார்” என நடிகர் ரஜினிகாந்தை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.


 






அதுமட்டுமில்லாமல் “தனிப்பட்ட தாக்குதல் கேவலமானது. அண்ணாமலை அரசியல் ரீதியில் மோதட்டும்” என மற்றொரு ட்வீட்டும் செய்திருக்கிறார். ”தற்போது அண்ணாமலை டீம் உதயநிதி ஸ்டாலின் மகனின் புகைப்படத்தை கசியவிட்டு அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணையும் அவமானப்படுத்துகிறது. பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் அண்ணாமலை தலைமையில்? அடல்ட் வீடியோ ஆடியோ போட்டோ புகழ் அண்ணாமலை.” எனத் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து இது போன்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.