`நான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினை நம்புகிறேன். நமது பிரச்னைகளை எதிர்கொள்ள நாம் ஒன்றாக நிற்க வேண்டும்’ என்று தற்போது சென்னையில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளைப் பற்றி பதிவிட்டுள்ளார் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். 


தனது ட்விட்டர் பக்கத்தில் சமீப காலங்களில் அதிகமாக நேரம் செலவிட்டு வரும் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தொடர்ந்து தனது அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியும், பகிர்ந்தும் வருகிறார். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் சுதா பரத்வாஜுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது, `ஜெய் பீம்’ படம் பார்த்துவிட்டு, `நாம் அனைவருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு இருக்கிறது’ என்று கூறியது, பணமதிப்பு நீக்கம் தோல்வியடைந்த திட்டம் என்ற செய்தியைப் பகிர்ந்தது, பெரியார் பிறந்தநாளின் போது அவரைப் புகழ்ந்து பதிவிட்டது முதலான பதிவுகளின் மூலம் தனது அரசியல் நிலைப்பாடுகளைத் தொடர்ந்து பகிரங்கமாக அறிவித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். 











ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்


 


சமீபத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, அப்பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் தேங்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. சென்னையில் இவ்வாறான நிலை ஏற்படக் காரணம், ஆளும் திமுக அரசு என்று ஒரு சாராரும், கடந்த பத்தாண்டுக் கால அதிமுக ஆட்சியே என்று மற்றொரு சாராரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நம்புவதாகத் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். 






 


தனது ட்விட்டரில் பி.சி.ஸ்ரீராம், `நான் நமது முதல்வர் மு.க.ஸ்டாலினை நம்புகிறேன். அவர் அவரது பணியைச் செய்யட்டும். அரசியலைப் பின்னர் பார்த்துக் கொள்ளலாம். நமது பிரச்னைகளை எதிர்கொள்ள நாம் ஒன்றாக நிற்க வேண்டும். பிரச்னைகள் முடிவடைந்த பிறகு, அரசியல்வாதிகள் மோதிக் கொள்ளட்டும். நமக்கு அரசியல்வாதிகளின் உண்மையான நிறம் என்ன என்பது தெரியும். அதனை அவர்கள் பகிரங்கப்படுத்தாமல் இருக்கட்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.