உடோபியா  உலகத்தில் இருப்பது போல் ஸ்டாலின் பேசுகிறார்; எஜமானர் சொன்னதைச் சொன்ன கிளி போல் ஊடகங்கள் அவரைப்  போற்றுகின்றன என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:


உடோபியா  உலகத்தில் இருப்பது போல் ஸ்டாலின் பேசுகிறார்; எஜமானர் சொன்னதைச் சொன்ன கிளி போல் ஊடகங்கள் அவரைப்  போற்றுகின்றன. ஆனால் மக்களுக்கு அவர்களின் சட்டமன்ற பிரதிநிதிகள் தங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்பது தெரியவில்லை. ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரமே கால்வாய்கள் தூர் வாரப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை 4ல் ஒரு பங்கு கால்வாய்கள் மட்டுமே சென்னை நகரில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. களப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. கண்காணிப்பும் இல்லை. கடந்த 6 மாத கால ஆட்சியில் வழக்கம்போல் திமுக கான்ட்ராக்டர்கள் மீதே கவனம் வைத்திருந்தது. அதற்காக அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்த்தனரே தவிர, களத்தில் இறங்கி ஏதும் செய்யவில்லை. அவர்கள் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று கூறும் பொய் ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டு வருகிறது. அதனால் தான் கொளத்தூர் தொகுதியில் நாங்கள் படகில் சென்று உண்மையை விளக்க நேர்ந்தது. அந்தப் பயணத்தின் மூலம் நாங்கள் உலகுக்கு உண்மையைச் சொல்லியுள்ளோம் என்று கூறினார்.
இவ்வாறு அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.






இதற்காக திமுகவினர் பலரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே, அவர் படகில் சென்று ஆய்வு நடத்தியபோது அது வெறும் நாடகம். கோட் ஆன் தி போட் என்று ஹேஷ்டேகை உருவாக்கி ட்ரெண்டாக்கினர்.
இந்நிலையில் அண்ணாமலையில் தற்போதைய ட்வீட்டால் பாஜக, திமுக ட்விட்டராட்டிகள் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.


அதென்ன உடோபியா உலகம்?


1477 முதல் 1535 வரை வாழ்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் மூர் என்பவர் எழுதிய நுாலின் பெயர் “உடோபியா”. இதுவே இத்தலைப்பில் எழுதப்பட்ட முதல் நுால். இது கிரேக்க சொல்லான ou-topos என்பதன் ஆங்கிலச் சொல். இதற்கு அர்த்தம் “எங்குமே இல்லாத” அல்லது “காணமுடியாத இடம்” என்பனவாம். இதே போன்ற உச்சரிப்பைக் கொண்ட மற்றொரு கிரேக்கச் சொல் eu-topos, என்பதன் அர்த்தம் “நல்ல இடம்”.


இந்த நுாலில் சர் தாமஸ் மூர், ஒரு தீவில் இருக்கக்கூடிய தனக்கென பிரத்யேகமான சமூக ஒழுங்குகளை, வாழ்க்கைமுறையை, பண்பாட்டை கடைபிடித்து ஒழுகும் ஒரு சமூகத்தை படைத்துக் காட்டியிருப்பார்.


இதுதான் உடோபியா உலகம். இதனைச் சுட்டிக்காட்டியே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவை விமர்சித்துள்ளார்.