பொய் வழக்கில்  கைது செய்யப்பட்ட பாதிரியார் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’பாஜக அரசால் பொய்வழக்கில் கைதுசெய்யப்பட்ட பழங்குடி மக்களின் பணியாளர் பாதிரியார் ஸ்டான் சாமி உயிரிழந்தார் என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. இதை கொரோனா மரணமாகக்  கருதமுடியாது. மாறாக, பாஜக அரசு சட்டத்தின் துணையோடு செய்திருக்கும் படுகொலையென்றே கூறவேண்டும். பாஜக அரசின் இந்த ‘சட்டம்சார் பயங்கரவாதத்தை’ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசிகள் மத்தியில் அவர்களுக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் ஸ்டான் லூர்துசாமி என்ற கத்தோலிக்க பாதிரியார் ஆவார். அவரைக் கடந்த ஆண்டு பாஜக அரசு பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்தது. பீமா கோரேகான் என்னுமிடத்தில் நடைபெற்ற வன்முறையோடு அவரைத் தொடர்புபடுத்தி பாஜக அரசு அவரை சிறையில் அடைத்தது.


இந்தியாவெங்கும்  மூத்த வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பேராசிரியர்கள் இதே பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் ஸ்டான் சாமி அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதன்பேரில் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி அவர் தனியார் மருத்துவமனையின்றில் சேர்க்கப்பட்டார். 84 வயதான அவருக்கு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் பிணை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அவர் உயிரிழந்தார் என்ற இந்த செய்தியை நீதிமன்றத்தில் மருத்துவமனை சார்பில் தெரிவித்துள்ளனர். 




இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை படுத்தப்பட்டிருக்கும் பேராசிரியரும் புரட்சியாளர் அம்பேத்கரின் உறவினருமான ஆனந்த் டெல்டும்டேவை பிணையில் விடுவிக்க வேண்டுகோள் விடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மகாராஷ்டிர மாநில அமைச்சர்களை இரண்டு நாட்களுக்கு முன்பு நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தோம். இந்தச் சூழலில் ஸ்டான் சாமி அவர்களுடைய மரணம் நேர்ந்திருக்கிறது. 


பீமா கோரேகான் வழக்கு என்பது கம்ப்யூட்டரில் உளவு நிறுவனங்களே பொய்யான ஆதாரங்களைப் பதியவைத்து போலியாக உருவாக்கப்பட்ட வழக்குதான் என்பதைத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களோடு நிறுவியுள்ளனர். இந்தச் சூழலில் நீதிமன்றம் தொடர்ந்து இதில் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது.


ஏற்கனவே சனாதன் சன்ஸ்தா என்ற கொலை அமைப்பின் மூலமாக கோவிந்த் பன்ஸாரே,  நரேந்திர தபோல்கர், பேராசிரியர் கல்புர்கி,  ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்குகளில் தொடர்புள்ள சனாதன் சன்ஸ்தா அமைப்பை இதுவரை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து நடவடிக்கை எடுக்க பாஜக அரசு முன்வரவில்லை. முன்பு சனாதன் சன்ஸ்தா என்ற பயங்கரவாத அமைப்பு செய்த படுகொலைகளை இப்போது சட்டத்தின் துணையோடு பாஜக அரசு செய்ய முற்பட்டு இருக்கிறது என்பதையே ஸ்டான் சாமி அவர்களுடைய மரணம் காட்டுகிறது. இதை ஜனநாயக சக்திகள் வேடிக்கை பார்க்கக் கூடாது. இந்த மனிதத்தன்மையற்ற கொடுஞ்செயலைக் கண்டிப்பதற்கும், சிறைப் படுத்தப் பட்டிருக்கும் சிந்தனையாளர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


மரணமடைந்த மனித உரிமைப் போராளி ஸ்டான் சாமி அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.