அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அந்த மாவட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அஇஅதிமுக கழகத்தை வழிநடத்த வருகைதரும் தியாக தலைவி சின்னம்மா வருக, வருக என சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பெரியகுளத்திலேயே பல்வேறு இடங்களில் இந்த சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பெரியகுளம்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர். இந்த பகுதியிலேயே சசிகலாவிற்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் முளைத்துள்ளன. சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டப்போது இதே போன்று ஒட்டப்பட்ட போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்து தள்ளினர். ஆனால், இப்போது பெரியகுளத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை யாரும் இதுவரை சீண்டக் கூட இல்லை.
தேர்தல் தோல்விக்கு பிறகு தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி வரும் சசிகலா, அதிமுக-வை மீட்பேன், நிச்சயம் மீண்டும் வருவேன் என தொடர்ந்து சொல்லி வருகிறார். அதோடு, ஒபிஎஸ் அவராகதான் வெளியில் சென்றார் நாங்கள் ஒன்றுமே அவரை சொல்லவில்லை. சிறைக்கு செல்லும்போது அவர் எங்கள் கூட இருந்திருந்தால், அவரைதான் நான் முதல்வராக உட்கார வைத்துவிட்டு சென்றிருப்பேன் என சசிகலா பேசி வெளியான ஆடியோ அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. தேர்தல் நேரத்தில் ஒபிஎஸ் அளித்த பேட்டியில் கூட ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீது தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அவர் மீது வருத்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சசிகலாவை கண்டித்து, அவருக்கு எதிராக அதிமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலத்திலும், சிவி சண்முகம், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களிலும் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இதுவரை அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில்தான், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்தும், அவர் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் தேனி மாவட்டத்தின் பெரியகுளம் பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன.
ஒபிஎஸ் அமைதியாக இருப்பது, சசிகலாவிற்கு எதிராக எந்த கருத்தையும் உதிர்க்காமல் இருப்பது, போஸ்டர்கள் ஒட்டப்பட்டதற்கு ரியாக்ஷன் காட்டாமல் இருப்பது இவற்றையெல்லாம் வைத்து, சசிகலாவிற்கு ஆதரவாகவே அவர் இருப்பதாக, அதிமுகவினர் பேசி வருகின்றனர். ஆனால், ஒபிஎஸ் தரப்போ சசிகலாவை ஒரு பகடையாக வைத்து, தன்னை முன்னிலைப்படுத்தும் ராஜதந்திர நடவடிக்கைகளை ஓபிஎஸ் மேற்கொண்டு வருகிறார், அப்போதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பை சரி செய்ய முடியும் என்று கூறி வருகின்றார்கள். ஆனால், ஒபிஎஸ் தனது மனதில் என்ன வைத்திருக்கிறார் என்பதை அவரைத் தவிர யாரும் கணிக்க முடியாத நிலை நிலவுகிறது. விரைவில் அவர் மவுனம் கலைப்பார் என்று எதிர்பார்க்கலாம்..!