தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 234 சட்டமன்றத் தொகுதிகள் அமைந்துள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி இந்த 234 சட்டபேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் எண்ணும் பணி மே மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.


கொரோனா தொடர்பான சமூக இடைவெளி விதிகளை கருத்தில்கொண்டு, வாக்குபதிவு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர்களின் எண்ணிக்கை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்கப்பட்டது.


தபால் வாக்குப்பதிவு : 


யாரெல்லாம் அஞ்சல் ஓட்டு போட தகுதியானவர்கள் ? 


பாதுகாப்புப் படை பணியாளர்கள், அயல்நாட்டு தூதரக பணியில் உள்ளோர், தடுப்புக்காவலில் சிறையில் உள்ளோர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் நாளில் பணியில் உள்ள நடத்துநர்கள், ஓட்டுனர்கள் மற்றும் உதவியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேர்பட்டோர், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள், வானூர்தி பணியாளர்கள் உள்ளிட்டோரில் தேர்தல் நாளன்று பணியில் உள்ளோர் அஞ்சல் ஓட்டு போட தகுதியானவர்கள்.            


அஞ்சல் வாக்கு சீட்டுகள் எண்ணும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னர்தான், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணிக்கையின் கடைசி சுற்று பணி முடிக்கப்படும். அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்குகள் எண்ணும் பணி அனைத்தும் முடிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திலும் குலுக்கல் முறையின் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குச் சாவடிகளின் VVPAT paper Slips வாக்கு எண்ணிக்கை பணி துவக்கப்படும்.   


முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும்  தபால் வாக்குகள் பாதுகாக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி கண்காணிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


வி வி பேட் கருவி என்றால் என்ன:   


வாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVMs) என்பது, வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot unit), கட்டுப்பாட்டு இயந்திரம் (Control Unit ) மற்றும் VVPAT என மூன்று கருவிகளை உள்ளடைக்கியது.         


தேர்தலின் போது வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான வி வி பேட் கருவி அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் பொருத்தப்பட்டது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் 50 வாக்குகள் செலுத்தப்பட்டு, அவைகள் வி வி பேட் மூலம் சாரிபார்க்கப்பட்டு, வேட்பாளர்களில் மூவர்களுக்கு காண்பிக்கப்பட்ட பின், வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். 


வாக்குப்பதிவு முடிந்த பிறகு ( ஏப்ரல் 6 - மே 2):    


வாக்குப்பதிவு முடிந்த பின், ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்படும். 


பாதுகாப்பு அறையானது இரட்டை பூட்டு அமைப்பை கொண்டிருக்க வேண்டும். பூட்டின் ஒரு சாவியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மற்றொரு சாவியை சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுவலரும் வைத்திருக்குமாறு ஏற்பாடு செய்யப்படும். 


வாக்குகள் எண்ணப்படுவதற்காக, ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணிநேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படும். வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட உடனே அறையை ஒட்டிய உட்புற சுற்றுப்பகுதியில் மத்திய போலீஸ் படையும், அறைக்கு வெளியில் மாநில ஆயுதப் போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். 


வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க, போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்குமாறு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும். அவர்கள், அந்த இடத்தின் உட்புற சுற்றளவுக்கு வெளியில் நின்று கண்காணிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் ஒரு பெரிய திரையில் சி.சி.டி.வி காட்சி காட்சிப்படுத்தப்படும். இதனால் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை அவர்களால் தொடர்ந்து கண்காணித்து வர முடியும்.   


வாக்கு எண்ணிக்கை (மே 2-ஆம் தேதி):  


வாக்குகள் எண்ணப்படும் நாளன்று, பாதுகாப்பு அறையானது வேட்பாளர்கள்/அவர்களின் பிரதிநிதிகள், தேர்தல் அதிகாரி மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் வீடியோ பதிவின் கீழ் திறக்கப்படும். 


வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பற்றி: 


சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி, வாக்கு எண்ணிக்கை மையத்தில், வாக்கு எண்ணிக்கை முகவர்களாக 15 நபர்களை நியமிக்கலாம். முகவர்களுக்கு தனியாக Counting Agent Identity Card என்று சொல்லக்கூடிய அடையாள அட்டையை தேர்தல் நடத்தும் அலுவலகம் கொடித்திருக்கும். வாக்கு எண்ணிக்கையின் போது, முகவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய சாப்பாடு, டி, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை  மாவட்டம் நிர்வாகம் வழங்கும். இதில், ஒரு தகவல் என்னவென்றால், இதற்கானத் தொகையினை  வேட்பாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலக தனி வட்டாட்சியரிடம் செலுத்திட வேண்டும்.           


வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் வைக்கப்பட்ட சீல், முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டு, வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும் என்றும் அது தெரிவித்துள்ளது.  உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள், வி வி பேட்டில் பதிவான ரசீதுகளுடன் சரிபார்க்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது.


வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் மற்றும் விவி பேட்  வாக்குகள் இடையே முரண்பாடு இருந்தால் என்ன ஆகும்?


அத்தகைய சந்தர்ப்பத்தில், வி வி பேட்டில் பதிவான ரசீதுகளின் அடிப்படையில் தேர்தல் முடிவுகள் நிர்ணயிக்கப்படுகின்றன.