விஜயும் அரசியல் ஆசையும்
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்கள் அரசியலில் களம் காண்பது, தொடர்கதையாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை , தற்பொழுது சூழலில் அரசியல் ஆசை மிக்க நடிகர் யார் என்று கேட்டால், அது நடிகர் ' விஜய் 'தான். குறிப்பாக நடிகர் விஜய் நடத்தி வரும் " விஜய் மக்கள் இயக்கம் " ( vijay makkal iyakkam ) அதற்கான முன் எடுப்பாகவே கருதப்படுகிறது. நற்பணி மன்றம் மட்டும் நடத்தி வந்த விஜய், படிப்படியாக தனது விஜய் மக்கள் இயக்கத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் மட்டுமில்லாமல் அதற்கு துணை அமைப்புகளையும் உருவாக்கி உள்ளார். இளைஞரணி, தொண்டரணி, மகளிர் அணி வழக்கறிஞர் அணி உள்ளிட்ட அணிகளை விஜய் கட்டமைத்து வருகிறார்.
மக்களின் கவனத்தைப் பெற முயற்சி
அதேபோன்று, தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கத்தை மக்கள் பணி செய்யவும், உத்தரவு பிறப்பித்துள்ளார். 22 மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விலையில்லா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. அதே போன்று, பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில், கிராமப்புற சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு முட்டை மற்றும் பால் ஆகியவற்றை வழங்கியும் வருகின்றனர். இது போக ரத்தம் தானம் செய்வது , கண் தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உள்ளிட்ட மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
வெற்றியை சுவைத்த விஜய் மக்கள் இயக்கம்
இதுபோக நடந்து புரிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நகர் மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தலில் நிற்பதற்கு ' விஜய் ' அனுமதி அளித்திருந்தார். அவ்வாறு தேர்தலில், போட்டியிட்ட ' விஜய் மக்கள் இயக்க ' நிர்வாகிகள் சிலர் வெற்றி பெற்றிருந்தனர். இந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயக்கத்தை, மேலும் கட்டமைக்க விஜய் முயற்சி செய்து கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியாக மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து வந்தார்.
மாவட்ட நிர்வாகிகளுக்கு டார்கெட்
மாவட்ட நிர்வாகிகளுக்கு, பூத் வாரியாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோக மாவட்டம் தோறும் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அந்தப் படிவங்களில், தொகுதிவாரியான தகவல்களையும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கேட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும், மாவட்டம் தோறும், அனைத்து அணிகளையும் கட்டமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் கூட்டத்திற்கு ஏற்பாடு
இந்த நிலையில் சென்னையில் அடுத்த மாதம் பொதுக்கூட்டம் ஒன்றை விஜய் தலைமையில் நடத்த விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்னதாக , மாவட்டம் தோறும் இருக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் , 12 ஆம் மற்றும் 10ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக , அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் உதவி தொகைகளை விஜய் வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் இனி எந்த வித அரசியல் இயக்கத்திலும் செயல்படக்கூடாது, என விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டம் விஜய் பிறந்தநாள் ஆன ஜூன் 22 ஆம் தேதி நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.