கலைஞர் நாணயத்தில் இந்தி மொழி வாசகங்கள் அச்சிடப்பட்டது ஏன் என்றும், நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஏன் எனவும் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினரும் கே.பி. சங்கர் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியதாவது:
"இந்த விழாவை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருத்தர் இருக்கிறார், எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று பேட்டி கொடுக்கிறார். என்னவென்றால், நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார். முதலில் அரசியல் தெரிந்திருக்கவேண்டும். இல்லை நாட்டின் நடப்பு புரிந்திருக்கவேண்டும்.
அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால், மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி. நிகழ்ச்சி. ஏற்கனவே, பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்த எம்.ஜி.ஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது.
அதைபோல அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள்.
அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது மத்திய அரசு இந்தியில்தான் எழுதி, அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுத்துக்கள்அமைந்திருக்கும்.
அண்ணாவின் தமிழ் கையெழுத்து
ஆனால் அண்ணாவுக்கு நாணயத்தை வெளியிடுகிறபோது கலைஞர்என்ன செய்தார் என்றால், யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை செய்தார். அண்ணாவின் தமிழ் கையெழுத்து அதில் இடம்பெறச் செய்யவேண்டும் என்று சொல்லி, அண்ணாவின் தமிழ் கையெழுத்து நாணயத்தில் பொறிக்கப்பட்டு அதற்கு பிறகுதான் அது வெளியிடப்பட்டது. அது போலதான், கலைஞர் நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது.
இதைக்கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல், தெரிந்துகொள்ளாமல், இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. கேட்கிறார்? ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை? அய்யா எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, இந்த நிகழ்ச்சி திமுக நடத்தவில்லை.
நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு
நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில்தான் நிகழ்ச்சி நடந்தது. இந்த சராசரி அறிவு கூட இல்லாமல், ஒரு எதிர்க் கட்சித் தலைவர் இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்