1938 முதல் 2022 வரை மத்திய அரசும் இந்தித் திணிப்பு சர்ச்சையும் தொடர் கதையாகி வருகிறது. 84 ஆண்டு கால வரலாற்றில் அப்படி என்னதான் நடந்தது?
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் நேற்று (ஏப்ரல் 7) பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ''உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை, நாட்டு ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.
வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது 'இந்திய மொழியில்' இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். இது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்
அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர், "ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள்" என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா சொல்வது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்!
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. 'இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமைச்சர் அமித் ஷா நினைக்கிறாரா?
ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது! ஒற்றைத்தன்மை என்பது ஒருமைப்பாட்டையும் உருவாக்காது! ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள். ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள்'' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், திமுக எம்.பி. கனிமொழி, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அமித் ஷாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசும் இந்தித் திணிப்பு சர்ச்சையும் புதிதல்ல. பன்னெடும் காலமாக இந்தி மொழி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு நெடிய வரலாற்றைக் கொண்டது. 1938-ல் அன்றைய மெட்ராஸ் ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி, சோதனை முறையில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகக் கொண்டு வந்தார்.
அதற்கு தமிழறிஞர்களும் மொழி ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் இந்தி எதிர்ப்பு மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதே கோரிக்கையை வலியுறுத்தி 1939-ல் பெண்கள் மாநாட்டை நடத்தினர். கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு, திட்டம் வாபஸ் பெறப்பட்டது. எனினும் அப்போது தொடங்கிய போராட்டம், 21-ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
1946-ல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மீண்டும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டது. அதை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதும் போராட்டங்கள் நடைபெறுவதுமாய் இருந்தன. ஆட்சி மொழிச் சட்டம் அமல்படுத்தப்பட்டபோது தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை, அதாவது 1965 வரை ஆங்கிலம் நீடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அலுவல் மொழியாக உள்ள இந்தியை, 1965 ஜனவரி 26 முதல் ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
1963-ல் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, பிரதமர் நேருவுக்குக் கோரிக்கை வைத்தார். '1965-க்கு பிறகு இந்தியை மட்டுமே ஆட்சி மொழியாக்கக் கூடாது. ஆங்கிலம் தொடர வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கக் கூடாது' என்று கேட்டுக் கொண்டார். இதற்கு வட இந்தியத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு நேரு ''இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பி ஏற்கும் வரை ஆங்கிலமே தொடரலாம். இந்தி திணிக்கப்படாது'' என்ற வாக்குறுதியைக் கொடுத்தார்.
1965 மொழிப் போர்
எனினும் நேருவின் மறைவுக்குப் பிறகு காட்சிகள் மாறின. 1965 ஜனவரி 26 முதல் ஆட்சி மொழியாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்துத் திமுக துக்க நாளை அனுசரித்தது. ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மொழிப் போர் தொடங்கியது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. தமிழ் உணர்வாளர்கள் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீக்குளித்து மாண்டனர். இந்தியாவே குலுங்கியது.
தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை, ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி உறுதி அளித்தார். பின்னர், 1967-ம் ஆண்டு இந்திரா காந்தியும் அலுவல் மொழிச் சட்டத்தின் மூலம் இதை உறுதி செய்தார்.
எனினும் தொலைக்காட்சி, வானொலி, அரசு அலுவலகங்களில் இந்தி மொழியைப் பயன்படுத்தும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத கதையாக பாஜக அரசும் இந்தி மொழிப் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது.
2019-லேயே சர்ச்சையைக் கிளப்பிய அமித் ஷா
கடந்த 2019ஆம் ஆண்டு இந்தி தின விழாவையொட்டி, மத்திய அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்துவம் உண்டு. ஆனால், ஒரே மொழியாக இருப்பது அவசியமானது. அந்த ஒரு மொழி பலராலும் பேசப்படுவதாக இருக்க வேண்டுமானால், அது இந்தி மொழியாகவே இருக்கும் என்று கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது.
2020 சம்பவங்கள்
2020-ல் தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில், இந்தியைப் பரப்புவதற்கென்று தனிப்பிரிவு வைத்திருப்பதை எதிர்த்து, சென்னை ஜிஎஸ்டி வரி உதவி ஆணையர் பா.பாலமுருகன் தனது உயர் அதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியது பேசுபொருளானது.
2020-ல் மத்திய அரசு அமல்படுத்திய புதிய கல்விக் கொள்கையில், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. இந்தி மொழியை மறைமுகமாகப் பயன்படுத்தவே இந்த அம்சம் சேர்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
கடந்த 2020-ல் மதுரை மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துக்கு, உள்துறை அமைச்சகம் இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியது.
2020 ஆகஸ்ட் மாதம் திமுக எம்.பி. கனிமொழியிடம் நீங்கள் இந்தியரா என்று கேள்வி எழுப்பியது விவாதங்களைக் கிளப்பியது. டெல்லி செல்வதற்காகச் சென்னை விமான நிலையத்தில் காத்திருந்த கனிமொழியிடம் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் இந்தியில் பேசினார். தனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலத்தில் பேசுமாறு கனிமொழி கேட்டபோது, 'இந்தி தெரியாது என்றால் நீங்கள் இந்தியரா?' என்று கேட்ட சம்பவம் சர்ச்சையாகியது.
கனிமொழி வெற்றிமாறனும் 2011-ல் இதேபோன்ற சம்பவம் நடந்ததாக வேதனை தெரிவித்தார். இந்தி தெரியாததால், தமிழர்களெல்லாம் தீவிரவாதிகள் என்று விமான நிலைய அதிகாரி விமர்சித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். திரைப் பிரபலங்களும் இளைஞர்களும் இந்தி தெரியாது போடா என்ற டி-சர்ட்டை அணிந்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகின. கனிமொழி அவர்களுடன் எடுத்த புகைப்படங்களும் விமர்சனத்துக்கு ஆளாகின.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 'இந்தி நமது தேசிய மொழி' என்று ஸொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியது. பின்னர் ஸொமேட்டோ மன்னிப்பு கோரியது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த விமர்சனங்களைத் திசை திருப்பும் முயற்சியாகவே, இந்தித் திணிப்பு விவகாரத்தை மத்திய பாஜக கையில் எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.