தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு பாஜக தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. 



அனைத்து மாநிலங்களிலும் சொத்துவரி குறைவாக உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தி உள்ளதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கே.பி.ராமலிங்கம், சொத்து வரி மாநில அரசு உயர்த்திவிட்டு மக்களிடம் மத்திய அரசின் தூண்டுதலின் பேரில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது என்று கூறி வருகின்றனர். இதன் மூலம் பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வைக்கும் செயல் என்று கூறினார். மேலும் சொத்து வரி உயர்த்தப்பட்டால் வாடகை வீட்டில் குடியிருக்கும் நடுத்தர மக்களுக்கு வாடகை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது என்றார். 



இதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  சொத்து வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் விரைவில் வழக்கு போட  போவதாக கூறினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு செலவு செய்த 15 ஆயிரம் கோடி ரூபாயை மக்களிடம் வசூலிக்க சொத்து வரியை உயர்த்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் பல கோடி ரூபாய் செலவு செய்து வெற்றி பெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை பாஜக ஆளும் மாநிலங்களில் மிக குறைவாக உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியில் உயர்த்தி விட்டு மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் மாநில அரசு விதிக்கப்படும் வரியில் 25 ரூபாய் வரை விலை குறைக்க முடியும். தமிழக அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்கவேண்டும். பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தமிழகத்தை விட பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 10 ரூபாய் குறைவாக உள்ள நிலையில் தமிழகத்தில் மாநிலவரியை குறைக்க வேண்டும் என்றார்.