தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் ஆளுநர் ரவியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலரும் ட்விட்டரில் #தமிழ்நாடு என பதிவு செய்து வருகின்றனர்.
காசியில் நடந்த தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிக்கிறது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் எனப் பேசினார். ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலரும் தங்கள் கருத்துக்களை #தமிழ்நாடு என குறிப்பிட்டு பதிவு செய்து வருகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி “ நம் மொழி - பண்பாடு - அரசியல்-வாழ்வியலின் அடையாளம் “தமிழ்நாடு”. அப்பெயரை சட்டமன்றத்தில் சட்டமியற்றி, பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தது பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது என்றும் தமிழ்நாடு தான்!” என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “ #தமிழ்நாடு வெறும் பெயரல்ல. புவியியல்-மொழியியல்-அரசியல்-பண்பாட்டின் தனித்துவ அடையாளம். பெரும் போராட்டத்திற்கு பிறகு தமிழ் நிலத்திற்கு பெயர் சூட்டினார், கழகம் தந்த அண்ணா. அவர் வழியிலும், முத்தமிழறிஞர் வழியிலும் தமிழ்நாட்டினை தலைவர் @mkstalinதலைமையிலான கழகம் அரணாக காத்து நிற்கும்!” என தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் கமல்ஹாசன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை #தமிழ்நாடு என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளனர்.