திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 19ஆவது தடகளப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் தொடங்கி இரண்டாவது நாளாக நேற்றும்  நடைபெற்றது.


விளையாட்டு போட்டிகள்:


இந்த போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 49 கல்லூரிகளைச் சேர்ந்த 356 மாணவர்கள் 308 மாணவிகள் என 674 பேர் கலந்து கொண்டனர். இரு தினங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், ஈட்டி எறிதல், ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட 23 வகையான போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பழக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தனர்.


 




இன்று போட்டிகளில் வெற்றி பெற்று பெண்களுக்கான ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்ற வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கும், இதேபோல் இரண்டாம் இடத்தைப் பெற்ற திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கும். ஆண்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்ற திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி மாணவர்களுக்கும், இரண்டாம் இடத்தை பெற்ற முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோர் இணைந்து சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 



உதயநிதியை அமைச்சராக்கியது ஏன்?


இளைஞர்களையும் விளையாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் தான் தமிழக முதலமைச்சர் பொறுப்போடு உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை வழங்கி உள்ளதாகவும், இளைஞர்கள் விளையாடவும் வேண்டும் படிக்கவும் வேண்டும் என்று கூறியவர்,  தேர்வு நேரங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தக் கூடாது என்றும் கூறினார். அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர் இதற்காகத்தான் தமிழக முதல்வர் நான் முதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்ததையும் சுட்டிக்காட்டினார்.



நூற்றுக்கு நூறு சதவீதம்:


தொடர்ந்து பேசிய அவர், 1967 அண்ணா ஆட்சிக்கு வந்ததற்கு பின்பு தான் தமிழகத்தில் பெண் கல்வி உயர்ந்ததாகவும் அதனைத் தொடர்ந்து தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் பெண் கல்வி மற்றும் விளையாட்டை வளர்க்க வேண்டும் என்ற உணர்வோடு புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்ததையும் சுட்டிக்காட்டினார். பெண் கல்வியை உயர்த்த தமிழக முதல்வர் பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதை சுட்டிக்காட்டியவர், தமிழகத்தை உயர்கல்வி படிப்பில் நூற்றுக்கு நூறு சதவீதம் விரைவில் கொண்டு வருவது தான் தமிழக முதல்வரின் நோக்கம் மற்றும் கொள்கை என்றும் கூறினார்.


 




 


புதிய கல்விக் கொள்கை குறித்து விளக்கி பேசிய அவர் புதிய கல்விக் கொள்கையை மாணவர்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?என்று கேள்வி எழுப்பிய பொழுது மாணவர்கள் இல்லை என்று பதில் அளித்தனர். புதிய கல்விக் கொள்கையால் பலரது படிப்பு கேள்விக்குறியாகும் என்பதால் தமிழக முதல்வர் அதனை எதிர்த்து தமிழகத்திற்கு என கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என கூறி இருப்பதை சுட்டி காட்டியவர், தமிழகத்திற்கு இரு மொழிக் கொள்கையே போதும் என்றும் பேசினார். 5 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளியை கொண்டு வந்து அனைத்து கிராமங்களிலும் பள்ளிக்கூடங்களை கொண்டு வந்து ஆரம்பப் பள்ளியை வளர்த்தவர் காமராஜர் என்றும், 3 கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளிக்கூடத்தை கொண்டு வந்து பள்ளிக்கூடத்தின் எண்ணிக்கையை உயர்த்தியவர் கலைஞர் என்றும் ,


 




 


அதேபோல் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு மாதம் ரூபாய் 400 வழங்கிய ஆட்சியும் கலைஞர் ஆட்சிதான் என்றும் பெருமிதமாக பேசிய அவர், 2022 ஆம் ஆண்டு மகாலி சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆண்களுக்கான பளு தூக்கும் போட்டியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் இரு வெள்ளிப் பதக்கங்களும். 1 வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர் என்றும், அகில இந்திய ஆண்களுக்கான சிறந்த உடல் அமைப்பு போட்டியில் வெள்ளி பதக்கத்தையும், போல் ராஜஸ்தானில் நடைபெற்ற மல்லர் கம்பு விளையாட்டில் தங்கப் பதக்கத்தையும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.