காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் தான் இன்று பாஜகவில் இணைவார் எனக் கூறப்பட்டிருந்ததை மறுத்துள்ளதோடு, பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
`நான் நாளை பாஜகவில் இணையப் போவதில்லை.. அப்படி ஏதேனும் நடந்தால் உங்களிடம் சொல்கிறேன்’ என செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார் ஹர்திக் படேல்.
குஜராத் மாநிலத்தில் பதிதார் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான போராட்டம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த ஹர்திக் படேல் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டதைக் கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹர்திக் படேல், `எந்த அரசும் இப்படியான குழப்பம் விளைவிக்கும் கைகளுக்குள் சென்றால் என்னவாகும் என்பதை இன்று மிக சோகமான நிகழ்வு ஒன்றின் மூலம் பஞ்சாப் உணர்ந்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு, சர்வதேச கபடி வீரரின் கொடூரப் படுகொலை, இன்று இளம் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை ஆகியவை மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. பஞ்சாப் முதல்வரும், பஞ்சாப் அரசை டெல்லியில் இருந்து நடத்திக் கொண்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியினரும், தாங்கள் காங்கிரஸ் கட்சியைப் போல பஞ்சாப் மாநிலத்திற்கு வலி தர வேண்டுமா அல்லது மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். சித்து மூஸ்வாலாவுக்கு அஞ்சலிகள்’ எனக் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் மான்சா மாவட்டத்தில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டார். அவரது கொலைக்குக் காரணமாக குழு மோதல்கள் இருக்கலாம் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் குஜராஹ் மாநில செயல் தலைவராக இருந்த ஹர்திக் படேல் தனது பதவியை ராஜினாம செய்ததோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஹர்திக் படேல், கடந்த வாறம் கட்சியில் இருந்து விலகிய போது, அதன் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சி நாட்டின் முக்கிய விவகாரங்களில் வெறும் தடைக் கல்லாக மட்டுமே இருந்ததாகவும், அனைத்தையும் எதிர்க்கும் ஒன்றாக மாறியிருப்பதாகவும் விமர்சனம் செய்திருந்தார். அதே வேளையில், பாஜகவின் தலைமையின் முடிவுகளை எடுக்கும் பண்பையும் ஹர்திக் படேல் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.