திமுகவில் அண்மை காலமாக உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமாக எழுந்து வருகிறது. அமைச்சர்கள் வெளிப்படையாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி தீவிரமாக பரப்புரை மேற்கொண்டார்.


திமுக மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில், உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போதும்  உதயநிதியை இளைஞரணி செயலாளராக்க வேண்டும் என திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாவட்டமாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்த நிலையில் தற்போது உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என  திருச்சி திமுக தெற்கு மாவட்ட கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.




மேலும் இந்த கூட்டத்தில் ஜூன் 3-ஆம் தேதி  முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கழகக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது எனவும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி கிழக்குசட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என். சேகரன் ,என். கோவிந்தராஜன், அரங்கநாதன் , செந்தில் மற்றும் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள்,  ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண