தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த வேட்பாளர்களின் மனுக்களைத் தேர்தல் ஆணையம் இன்று பரிசீலனை செய்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அ.ம.மு.க. வேட்பாளர் பால்கண்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன், மக்கள் நீதிமய்ய வேட்பாளர் ராஜ்குமார் ஆகியோரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 




இந்த நிலையில் எங்கே தனது மனுவையும் ஆணையம் ‘வாய்ப்பில்ல ராஜா!’ என நிராகரித்துவிடுமோ என்கிற கலக்கத்தில் இருந்த காரைக்குடி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா தனது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அறிந்து நிம்மதிப் பெருமூச்சில் டுவிட்டரில் அந்த மகிழ்ச்சியைப் பதிவிட்டிருக்கிறார்.


 






அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, தேசிய ஜனநாயக கூட்டணியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகிய என்னுடைய வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.   


மேலும், தமிழகத் தேர்தலில் போட்டியிடும் பிற பா.ஜ.க.வேட்பாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார். கட்சியின் வேட்பாளர்கள் பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனது தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்தார் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.