சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. 234 தொகுதிகளில் போட்டியிட 7151 நபர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ஆண்கள் 6059 நபர்களும், பெண்கள் 1051 நபர்களும், மூன்றாம் பாலினத்தர் 3 நபர்களும்  வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.


இதையடுத்து, வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணி முதல் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை முதல் நடைபெற்று வரும் பரசீலனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் மனு ஏற்கப்பட்டுள்ளது. 




இந்த தேர்தலில் அறிமுக வேட்பாளர்களாக களமிறங்கும் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. இதுதவிர, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோரது மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.