காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


குலாம் நபி ஆசாத் ராஜினாமா


காங்கிரஸின் பிரசாரக் குழுத் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி, ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அகில இந்திய அரசியல் விவகாரக் குழுவில் உறுப்பினராகவும் பதவி வகித்தார். அவர் மாநில தலைவர் பதவி மட்டுமின்றி, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும், ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை வந்துள்ள தகவலின்படி, இந்த மாநில தலைவர் நியமனம் தனது மதிப்பிற்கும் அனுபவத்திற்கும் குறைவானதாக கருதிய காரணத்தால் அவர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. 



மீண்டும் மாநில அரசியல்


காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து தேசிய அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக வளர்ந்திருந்த அவரை மீண்டும் மாநில அரசியலில் இறக்கியது பிடிக்காததால் ராஜினாமா செய்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


தொடர்புடைய செய்திகள்: சூரியனுக்கும் வயதாகும்.. இறந்துபோகும்?! விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறும் ஷாக் தகவல்கள்!


நீண்டகால அதிருப்தி


காங்கிரஸின் தலைமை தொடர்பான பிரச்சனைகளின் மீது நீண்ட காலமாகவே அதிருப்தியில் இருந்து வந்தார் குலாம் நபி ஆசாத். இதனை வெளிப்படையாகவும் பல முறை அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் வேண்டுமென, சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிருப்தியின் நீட்சியாகவே இந்த ராஜினாமாவை பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.



தேர்தல் நடக்குமா?


இவர் மட்டுமின்றி, இவருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியின் மற்ற நிர்வாகிகள் சிலரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பிறகு சட்டசபை தேர்தல் நடத்தப்படும். எவ்வாறாயினும், குளிர்காலம் தொடங்கும் முன் எல்லை நிர்ணயம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை முடிக்க முடியாததால், இந்த ஆண்டு தேர்தலை நடத்த முடியாது என்ற நிலை உள்ளது. தேர்தலுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேர்தல் ஆணையம் சமீபத்தில் வாக்காளர் பட்டியலை வெளியிடும் தேதியை நவம்பர் 25-ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது. இதுவே யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு வெளியிடப்படும் முதல் வாக்காளர் பட்டியல் ஆக இருக்கும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.