திமுக வெற்றி பெற்ற விட்டது; அக்கட்சி தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று விட்டார். இப்படி தான் நேற்றைய அரசியல் நகர்வுகள் நடந்து முடிந்தது. அன்றைய தினமே பிரதான எதிர்கட்சியான அதிமுகவில், யார் எதிர்கட்சித் தலைவர் என்பதை முடிவு செய்ய கூடிய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் முடிவு எட்டப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன் இருந்த அதே இபிஎஸ்-ஓபிஎஸ் யுத்தம் தான்; என்ன... இப்போது அதிகாரம் இல்லை, அதனால் கிடைக்கும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் என்பதால் இம்முறை மோதல் கொஞ்சம் வீரியம் அடைந்திருக்கிறது. என்ன நடந்தது அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில்? என்ன சொன்னார் இபிஎஸ்? ஏன் கொதித்தார் ஓபிஎஸ்? எதனால் ஒத்திவைக்கப்பட்டது கூட்டம்? களத்தில் இருந்தும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடமிருந்தும் பெறப்பட்ட நேரடி தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது ABP நாடு.




இன்று சம்பவம் நிச்சயம் என்கிற ரீதியில் தான் ராயபுரம் அதிமுக அலுவலகம் நேற்று மாலை தயாராக இருந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பே அலுவலக வளாகத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். கூட்டம் துவங்குவதற்கு முன்பே அங்கு என்ன நடக்கப் போகிறது என்பதற்கு அதுவே முன்னோட்டமாக இருந்தது. எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வந்து சேரவும், முக்கியத் தலைவர் ஒன்று கூடவும் நேரம் சரியாக இருந்தது. எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் கூட்ட அரங்கில் காத்திருக்க, முன்னதாக முக்கியத் தலைவர் மட்டும் தரை தளத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். 




சில நிமிடங்கள் தொடர்ந்த அந்த ஆலோசனை பின்னர் நிறைவு பெற, அவர்கள் எல்.எல்.ஏ.,க்கள் கூட்ட அரங்கிற்கு புறப்பட்டனர். அப்போதிருந்தே ஆரம்பித்தது அதிமுக பரபரப்பு. ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டத்திற்கு வந்து சேர்ந்ததும். முதலில் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. எப்போதும் அமைதியாக இருந்து கடைசியல் கருத்து சொல்லும் ஓபிஎஸ், இம்முறை ஆரம்பத்திலேயே அடித்து விளையாடத் துவங்கியுள்ளார். ‛‛நீங்க எடுத்த தவறான முடிவு தான்... கட்சி தோற்க காரணம்...’’ என, எடுத்த எடுப்பிலேயே இபிஎஸ்-யை நோக்கி குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவ்வளவு தான், இபிஎஸ்-யும் பதிலுக்கு பாய்ந்துள்ளார். 




 


’’தமிழகம் முழுதும் செலவு பண்ணிருக்கேங்க... எவ்வளவு தேர்தல் வேலை பார்த்திருக்கேங்க...’’ என இபிஎஸ் கொதிக்க, ‛‛உங்க பணத்தையா செலவு பண்ணீங்க... கட்சிப்பணத்தை தானே செலவு பண்ணீங்க...’’ என, ஓபிஎஸ் கேட்க, இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் ஓபிஎஸ் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‛‛கட்சிக்கு பண்ணதுதானாங்க... இல்லைன்னா இவ்வளவு ஜெயிச்சிருக்க முடியுமா...?’’ என, இபிஎஸ் கேட்க, ‛‛என்ன ஜெயிச்சோம்... ஆட்சியை இழந்துட்டோமே...’’ என கூலாக கேட்டுள்ளார் ஓபிஎஸ். ‛‛கொங்கு மண்டலம் முழுதையும் முழுசா தூக்கியிருக்கோம்; என்னோட ஏரியா முழுதும் கட்சி ஜெயிச்சிருக்கு; உங்க ஏரியா நிலைமை என்ன?’’ என, இபிஎஸ் குண்டை போட்டுள்ளார்.




‛‛உங்களுக்கு ஓட்டு வரணும்னு... வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கிட்டை அறிவிச்சீங்க... அது உங்க ஏரியாவுக்கு எடுபட்டு போச்சு; தென் மாவட்டங்கள்ல எல்லா ஜாதியும் அதை கடுமையா எதிர்த்துட்டாங்க... அதான் தென் மாவட்டங்களில் தோத்து போணோம்,’’ என, ஓபிஎஸ் கூற, தென் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் அதை ஆமோதித்துள்ளனர். இப்படி இருதரப்பிற்கும் அவரவர் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு குரல் எழுப்ப, எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்யும் கூட்டம் எதிரும் புதிருமான கூட்டமாக மாறியிருக்கிறது.




‛சரிங்க... இப்போ விசயத்துக்கு வர்றேன்... நீங்க முதலமைச்சர் ஆகணும்னு சொன்னீங்க... நானும் விட்டுக்கொடுத்தேன்; இப்போ தோத்துட்டோம். உங்க தலைமை தோத்துடுச்சு. கட்சியோடு ஒருங்கிணைப்பாளரா... நான் தான் எதிர்கட்சி தலைவர் ஆகணும்,’’ என கறார் கட்டளை போட்டுள்ளார் ஓபிஎஸ். ‛‛அது எப்படிங்க முடியும்? முதல்வர் வேட்பாளரா என்னை முன் வைத்து தானே தேர்தல் நடந்துச்சு... நான் தானே இந்த தேர்தலுக்கு பொறுப்பு; அதிக இடங்களில் வெற்றி பெற வெச்சிருக்கேன், கட்சியோடு இணை ஒருங்கிணைப்பாளரா இருக்கேன்... எனக்கு எதிர்கட்சி தலைவர் தந்தால் தான், அடுத்து வர தேர்தலில் கட்சிக்கு நல்லதுனு,’’ இபிஎஸ் கூற, ஓபிஎஸ் தரப்பு கொந்தளித்துவிட்டதாம்.




எப்போதும் அமைதியா இருக்கும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட கருத்து சொல்லிருக்காரு. ‛‛எப்போதும் விட்டுக்கொடுத்துட்டே இருக்க முடியுமா? அண்ணன் ஓபிஎஸ் தான் இந்த முறை எதிர்கட்சி தலைவர்; அவருக்கு தான் வாய்ப்பு தரணும்,’’ என, துணிந்து அடித்துள்ளார் கடம்பூர் ராஜூ. சுமார் 4 மணி நேரம், எந்த முடிவும் எட்டப்படாமல் கூச்சலும், குழப்பமுமாய் தொடர்ந்தது எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம். இந்த முறை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்கிற தீர்க்கமான முடிவில் ஓபிஎஸ் இருக்கிறார். விட்டால் பிடிக்க முடியாது என்கிற மனநிலையில் இருக்கிறார் இபிஎஸ். என்றாலும், தேர்தலில் வெற்றி ,தோல்வி தான் ஒருவரின் கருத்தை பிரதிபலிக்கும் என்பதால், இந்த முறை இபிஎஸ் கொஞ்சம் பலவீனப்பட்டுள்ளார் என்றே தெரிகிறது. கடந்த முறை இபிஎஸ் பக்கம் இருந்த சிலரே, இம்முறை ஓபிஎஸ் பக்கம் பேசியது உண்மையிலேயே இபிஎஸ் தரப்புக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான். 


‛ஆட்சி போயிடுச்சு... கட்சியிலும் குழப்பம் வந்தால் ரொம்ப கஷ்டமாயிடும். கொஞ்சம் பொறுமையா முடிவு பண்ணுங்க,’ என, மூத்த மாஜி அமைச்சர் ஒருவர் கூற, அதை அனைவரும் ஏற்றுக்கொண்டார்களாம். ‛இப்படியே கூட்டத்தை முடிச்சா, வெளியில் வேறு விதமா பேசுவாங்க... வாங்க அம்மா சமாதிக்கு போயிட்டு வரலாம்,’ என மூத்த எம்.எல்.ஏ., ஒருவர் கூற, அதன் பின் அனைவரும் ஜெ., நினைவிடம் வந்து வணங்கி, அங்கேயும் அவரவர் ஆதரவாளர்கள் கோஷம் போட்டு ஆர்ப்பரிச்சு, அப்புறமா  அமைதியா கலைந்து போயிருக்காங்க. 




மறுபடியும் திங்கள் கிழமை காலை 9:30 மணிக்கு எம்.எல்.ஏ., கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணிருக்காங்க. அதுக்கு முன்னாடி, ஓபிஎஸ்-இபிஎஸ் வீடுகளுக்கு சென்று இருதரப்பையும் சமாதானப்படுத்தி யாராவது ஒருவரை ஒரு மனதா தேர்வு செய்யலாம்னு சில சீனியர் மாஜி அமைச்சர்கள் முடிவு பண்ணிருக்காங்களாம். இன்றும், நாளையும் அதற்கான வேலை தான் நடக்கப்போகுதாம். ஓபிஎஸ்-மற்றும் இபிஎஸ் வீடுகள், அடுத்த இரண்டு நாட்களுக்கு மாஜிகளின் பேச்சு வார்த்தையில் பிஸியா இருக்கும்னு சொல்றாங்க. கட்சி அதிகாரத்திற்கு எதிர்கட்சி தலைவர் பதவி முக்கியம் என்பதால் யார் விட்டுக்கொடுக்க போவது? யார் விலகிக் கொள்ளப் போவது என்பது இன்னும் இரு நாட்களில் தெரியலாம் என்றாலும், அந்த முடிவு மட்டும் அவ்வளவு எளிதில் எட்டிவிடாது என்பது மட்டும் உண்மை. பார்க்கலாம் இரட்டை இலையின் இரட்டை தலைமை என்ன செய்யப் போகிறது என்று!