கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அந்தக் கட்சியின் மதுரவாயல் தொகுதிக்கான 2021-ஆம் ஆண்டு தேர்தல் சட்டமன்ற வேட்பாளரும் கட்சியின் சூழலியல் பிரிவு மாநிலச் செயலாளருமான பத்மப்ரியா. அவரது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும்போல இன்னும் சிறப்பாக தொடரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாமல் படுதோல்வி அடைந்ததை அடுத்து கட்சியின் துணைத்தலைவர் உட்பட ஒவ்வொருவராக மய்யத்தின் முகாமிலிருந்து வெளியேறி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது பத்மப்ரியா வெளியேறியிருக்கிறார்.


யார் இந்த பத்மப்ரியா?




25 வயதான பத்மப்ரியா நுண்ணுயிரியல் பட்டப்படிப்பு முடித்தவர், பள்ளி ஆசிரியர். சென்னை தமிழச்சி என்கிற தனது யூட்யூப் சேனல் வழியாகப் பிரபலமானவர். தன்னை பாதிக்கும், அல்லது தன்னை ஈர்க்கும் விஷயங்களைத் தனது ஸ்டைலில் மக்களிடம் எடுத்துப்போவது பத்மப்ரியாவின் பாணி. அழகுக்கலை, உடல் நலன், செடிகள் வளர்ப்பு எனப் பதிவிடுபவர் சமூகநலன் சார்ந்தும் பல காணொளிகளைப் பதிவிட்டுள்ளார். அதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்போல பேசிய அவரது வீடியோ சமூகத்தில் அவரை ஒருபடி முன்னே நகர்த்தியது.


மத்திய அரசின் 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்து அவர் பேசி வெளியான காணொளிதான் அவரை கமல்ஹாசனே அழைத்துப் பாராட்டும் வகையில் வைரலாகியது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவுச் சட்டம் என்றால் என்ன? அதன் விளைவுகள் என்ன என்பதை அந்தக் காணொளியில் விவரித்திருப்பார். அரசு கொள்கைகளை விமர்சிக்கும் எந்தக் கருத்தும் போல பத்மப்ரியாவின் கருத்தும் பல எதிர்ப்புகளைச் சந்தித்தது. மிரட்டல் விடுத்து வீடியோவை நீக்கும் அளவுக்கு வலதுசாரிகள் எதிர்த்தனர், இடதுசாரிகள் ஆதரித்தனர்.மய்யமோ கட்சிக்கு வா என இவரை அழைத்துக்கொண்டது. சில மாதங்களிலேயே கட்சியில் இணைந்தார் பத்மப்ரியா.




அழகுக்குறிப்பு வீடியோ வெளியிடுபவருக்கு அரசியல் எப்படி தெரியும்? என்கிற விமர்சனம் எழுந்தது. சொல் அல்ல செயல் என்று 2021 தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் களமிறங்கினார். இடஒதுக்கீடு குறித்த அவர் பேசியவை விமர்சனங்களை சந்தித்தாலும், கவன ஈர்ப்புதான் என சீண்டப்பட்டாலும்,  களத்தில் சிறிதுகாலம் தாக்குப்பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர். கமல்தான் தலைவர், கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என சத்தியம் செய்யாத குறையாகப் பேசியவர் தற்போது கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்.


சதுரங்க ஆட்டத்தில் அடுத்து எந்த காய் வெளியேறும் என்றும், மக்கள் மீதி மய்யம் என்றும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது மக்கள் நீதி மய்யம்.