தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வந்த காயத்ரி ரகுராம், கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக தலைமை அறிவித்தது. அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து, பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகினார்.


எம்பி திருமாவுடன் சந்திப்பு:


பாஜகவில் இருந்து முழுமையாக விலகிய காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை ஆதரித்து கடந்த சில மாதங்களாக பேசி வந்தார். வி.சி.க.வில் சேரப்போகிறீர்களா? என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மக்களுக்கு சேவை செய்வதற்காக எங்கு வேண்டுமானாலும் சேரலாம் என்று கூறியிருந்தார்.


மேலும், ‘இனிமேல் பாஜகவில் நான் சேரமாட்டேன். எந்த கட்சி அழைத்தாலும் அதில் இணைந்து மக்கள் பணியாற்றுவேன். என்னை அழைத்தால் தி.மு.க. அல்லது வி.சி.க.வில் இணைய தயார்’  என்று கூறியிருந்தார்.


இதற்கு மத்தியில், நடிகை காயத்ரி ரகுராம் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்தார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை காயத்ரி ரகுராம் சந்தித்துள்ள புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. 


தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது வி.சி.க. தலைவர், எம்.பி., தொல் திருமாவளவன், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு” என பதிவிட்டிருந்தார்.


சீமானை சந்திக்கும் காயத்ரி ரகுராம்:


இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்கவிருப்பதாக நடிகை காயத்ரி ரகுராம் தகவல் வெளியிட்டுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் ஆதரவு அளித்ததற்கு நன்றி கூற உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.


இது தொடர்பாக நடிகை காயத்ரி ரகுராம், சீமானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதற்கு சீமான பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


சீமான் அறிக்கை:


அதில், "அரசியலில் வாழ்வில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள் குறித்து நீங்கள் எழுதிய கடிதத்தை கண்டேன். அரசியல் வாழ்வில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மனக்காயத்தையும், வலியையும் என்னால் உணர முடிகிறது. ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் பெண்கள் அரசியலுக்கு வருவது என்பதே அரிது. அதையும் மீறி பல்வேறு தடைகளைத் தாண்டி அரசியலுக்கு வரும் ஒன்றிரண்டு பெண்களும் அவதூறுகளாலும், அதிகார மிரட்டல்களாலும் அரசியலைவிட்டே ஓரங்கட்டப்படுகின்றனர்.


ஆனால் அத்தனையையும் எதிர்கொண்டு, துணிவுடன் நிலைத்து நிற்கும் பெண்களே அரசியலில் வெற்றி பெறுகின்றனர். அந்த வகையில் நீங்கள் மனம் தளராது தமது அரசியல் பயணத்தைத் தொடர வேண்டும் என்பதே என்னுடைய அன்பான அறிவுறுத்தலுமாகும்.


பொதுவாழ்விற்கு வந்த பிறகு விமர்சனங்களை எதிர்கொள்ளவும், அவதூறுகளைக் கடந்து செல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும். “விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. அவதூறுகளை தாங்க முடியாதவர்கள் அற்ப வெற்றியைக்கூடப் பெற முடியாது . எனவே அப்படியொரு பண்பட்ட மனப்பக்குவமும், தளராத உறுதியும் கொண்டு சோர்வுறாது தொடர்ந்து அரசியல் களத்தில் துணிவுடன் போராட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.


மராட்டிய மண்ணின் மகளும், பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய சமூகச் சீர்திருத்தவாதியுமான சாவித்திரி பாய் பூலே அக்காலத்தில் பெண்களுக்குக் கல்விப் புகட்டுவதை, கடுமையாக எதிர்த்தனர் பழமைவாதிகள். அவர் மீது சேற்றினையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் அளித்தனர். தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து பள்ளி சென்றபின் வேறோர் சேலை அணிந்து கொள்வார். எத்தனை துன்பங்கள் வந்தபோதும் தனது சமூகப்பணிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கவோ, கைவிடவோ இல்லை அம்மையார் சாவித்திரி பாய் பூலே. அவருடைய உள்ள உறுதியே இலட்சியத்தை வெல்ல வைக்கும் உந்துசக்தியாக அவருக்கு இருந்தது என்பதைத் நீங்கள் உணர வேண்டும்.


இந்திய துணைக் கண்டத்தையே ஆட்டிப்படைத்த அம்மையார் இந்திராகாந்தியும், தமிழ்நாட்டு அரசியலின் அசைக்க முடியாத ஆற்றலாக இருந்த அம்மையார் ஜெயலலிதாவும் எதிர்கொள்ளாத விமர்சனங்களா? அவதூறுகளா? அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தவர்களே உடல் அளவிலும், உள்ள அளவிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டபோதும் அனைத்தையும் தாங்கிக்கொண்டு, மனம் தளராமல் போராடித்தான் இமாலய வெற்றிகளைப் பெற்றனர்.


அவர்களையெல்லாம் முன்மாதிரியாக கொண்டு நீங்கள் முன்னேற முயல வேண்டும். மாறாக துணிந்து அரசியலுக்கு வந்த, கலைத்துறை உள்ளிட்ட சிறப்பு அடையாளம் பெற்ற உங்களைப்போன்ற ஒரு சிலப் பெண்களே சோர்வுற்று, துவண்டு வெளியேறிவிட்டால் பிறகு எளிய பின்னணி கொண்ட பெண்கள் எப்படி அரசியலுக்கு வரத் துணிவார்கள்? வரமாட்டர்கள். அது மிக மோசமான முன்னுதராணமாகிவிடும்.


எனவே, எதற்காவும், யாருக்காகவும் பயந்து தான் கொண்ட இலட்சியத்தை இழந்துவிடக் கூடாதென்பது ஒவ்வொரு பெண்ணும் ஏற்க வேண்டிய உறுதிமொழி. அந்த வகையில் நீங்கள் மனம் கலங்காது தொடர்ந்து அரசியல் களமாடி மக்கள் தொண்டாற்றி வெற்றிகரமான அரசியல்வாதியாக திகழ என்னுடைய வாழ்த்துகள்!" என சீமான் குறிப்பிட்டுள்ளார்.