PM Modi at G7 Summit: 'பசுமை சகாப்தத்தை' உருவாக்க கூட்டு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என, ஜி7 மாநாட்டில் உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.


ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி:


இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அவுட்ரிச் அமர்வில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். அந்த நிகழ்வில் பங்கேற்ற போது, செயற்கை நுண்ணறிவில் (AI) தேசிய மூலோபாயத்தை வகுப்பதில், இந்தியாவின் முன்னோடியான நடவடிக்கையை அடிக்கோடிட்டு உரையாற்றினார்.  மேலும், மனிதனை மையமாக கொண்ட சிறந்த எதிர்காலத்தை நோக்கிய அணுகுமுறையையும் வலியுறுத்தினார். பிரபல போர்கோ எக்னாசியா ரிசார்ட்டில் பேசிய பிரதமர், கடந்த ஆண்டு இந்தியா நடத்திய G-20 உச்சிமாநாட்டின் போது வலியுறுத்தப்பட்ட AI இல் சர்வதேச நிர்வாகத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் மீண்டும் வெளிப்படுத்தினார்.






இலக்கு 2047 - மோடி:


அமர்வில் பேசுகையில், “செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்கும் முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவது எங்களின் தீர்மானம்.  சமூகத்தின் எந்தப் பிரிவினரும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதே எங்கள் அர்ப்பணிப்பு" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்தியாவின் அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டத்தையும் முன்னிலைப்படுத்தினார்.


மோடி வாழ்த்து:


ஜி7 அவுட்ரிச் அமர்வில் பிரமர் மோடி பேசியது தொடர்பாக, வெளியுறவு அமைச்சகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியின் அபுலியாவில் G7 உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு, ஆற்றல், ஆப்பிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பற்றிய அவுட்ரீச் அமர்வில் உரையாற்றினார். குழுவின் 50 வது ஆண்டு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


தொழில்நுட்பம் வெற்றிபெற வேண்டுமானால், அது மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையால் ஆதரிக்கப்பட வேண்டும். "அனைவருக்கும் AI” என்ற அடிப்படையிலான இந்தியாவின் AI பணியை குறிப்பிட்டு, இந்த தொழில்நுட்பம் முன்னேற்றத்தையும் அனைவரின் நல்வாழ்வையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.


எரிசக்திதுறை நடவடிக்கை - மோடி:


எரிசக்தி தொடர்பாக பேசும்போது, “எரிசக்தி துறையில் எங்கள் அணுகுமுறை நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. கிடைக்கும் தன்மை, அணுகல், மலிவு மற்றும் ஏற்றுக்கொள்ளுதல். 2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதில் இந்தியா உறுதியாக உள்ளது. "Plant4Mother" மரம் வளர்ப்பு பரப்புரை உள்ளிட்ட இந்தியாவின் மிஷன் லைஃப் [சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை] இல் உலகளாவிய பங்கேற்பிற்கு அழைப்பு விடுத்து” பிரதமர் மோடி பேசினார்.


பசுமை சகாப்தம் - மோடி: 


பசுமை சகாப்தம் பற்றி பேசுகையில், “2070 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியத்தின் இலக்கை அடைவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் செய்கிறோம். வரும் காலத்தை 'பசுமை சகாப்தமாக' மாற்ற நாம் ஒன்றாக முயற்சி செய்ய வேண்டும். உலகளாவிய தெற்கு நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கில் வைப்பதை இந்தியா தனது பொறுப்பாகக் கருதுகிறது. ஆப்பிரிக்க யூனியனை அதன் தலைமையின் கீழ் ஜி-20 இல் நிரந்தர உறுப்பினராக்குவதில் இந்தியாவின் பங்கை நினைத்து பெருமை கொள்கிறோம்” என பிரதமர் மோடி பேசினார்.