கடுமையான உபா சட்டத்தின் கீழ் பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயை விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, கருத்து சுதந்திரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 180 நாடுகள் கொண்ட பட்டியலில் கடந்தாண்டு 161ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்தாண்டு 159ஆவது இடத்தை பிடித்துள்ளது.
அருந்ததி ராய் மீது உபா சட்டம்: இந்த நிலையில், இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராயை உபா சட்டத்தின் கீழ் விசாரிக்க டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்திருக்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டு, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அருந்ததி ராய் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லி துணை நிலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "இந்த வழக்கில் அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் சர்வதேச சட்டப் பேராசிரியர் டாக்டர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் பிரிவு 45 (1)ன் கீழ் வழக்கு தொடர வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து காஷ்மீர் பிரிக்கப்படுவதை ஆதரிக்கும் வகையில் மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. பேசப்பட்டிருக்கின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம், அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் முன்னாள் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் இந்திய தண்டனைச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 196இன் கீழ் வழக்குத் தொடர சக்சேனா அனுமதி அளித்தார்.
நடந்தது என்ன? குறிப்பிட்ட அந்த மாநாட்டில் அருந்ததி ராய், ஷேக் ஷோகத் ஹுசைனை தவிர ஹுரியத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எஸ்.ஏ.ஆர். ஜீலானி (மாநாட்டின் தொகுப்பாளர் மற்றும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளி) மற்றும் வரவர ராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த ஆர்வலர் சுஷில் பண்டிட் புகார் அளித்துள்ளார். குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 156(3) இன் கீழ் டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் பகுதியாக இருந்தது இல்லை என்றும், இந்தியாவின் ஆயுதப் படைகளால் வலுக்கட்டாயமாக அது ஆக்கிரமிக்கப்பட்டது என்றும், இந்தியாவில் இருந்து ஜம்மு காஷ்மீர் சுதந்திரம் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜீலானியும் அருந்ததி ராயும் மாநாட்டில் பேசியதாக குற்றம்சாட்டப்படுகிறது.