தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவது ஏறக்குறைய முடிவாகிவிட்ட நிலையில், கட்சியில் இணைவது மட்டுமே மீதமிருப்பதாகவும், சில நாட்களில் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் இணைவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சோனியாகாந்தி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் இன்று மீண்டும் சோனியா காந்தியை சந்திக்கிறார் பிரசாந்த் கிஷோர். அவர் 2024 தேர்தலில் எப்படி வெல்வது என்பது பற்றிய 600 பக்கங்கள் கொண்ட பவர்பாய்ண்ட் ஸ்லைட் ஷோவை காட்டியிருக்கிறார்.
இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு காங்கிரஸ் செய்யவேண்டிய மாற்றங்கள் குறித்து பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டுள்ள விசயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தனித்தும், தமிழ்நாசு, மேற்குவங்கம் மற்றும் மகாராஸ்ட்ராவில் கூட்டணி வைத்தும் போட்டியிட வலியுறுத்தியுள்ளார். இதற்கு ராகுல்காந்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தியே இருக்கவேண்டும் என்று கூறியுள்ள அவர், துணைத்தலைவராகவோ அல்லது செயல்தலைவராகவோ காந்தி குடும்பத்தைச் சாராத வேறு ஒருவருக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். கீழ்மட்ட அளவில் இறங்கி வேலை பார்க்க காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் , தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப வேலை செய்ய தேவை என்ற காரணத்தையும் அவர் கூறியிருக்கிறார். அதோடு, ராகுல்காந்தியை நாடாளுமன்ற குழுத்தலைவராக நியமிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இவைகள் எல்லாம் கட்சியில் செய்யவேண்டிய 5 முக்கிய விஷயங்களில் ஒன்று என்று என்றும், கூட்டணியை முடிவு செய்வது, கட்சியின் கொள்கைகளை மீட்டெடுப்பது, கீழ்மட்ட அளவில் இறங்கி வேலை பார்க்கும் தலைவர்களை உருவாக்குவது, ஊடகம் மற்றும் சமூகவலைதள பிரச்சாரத்திற்கான ஒரு அமைப்பை உருவாக்குவது ஆகியவை மீதி திட்டங்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தற்போது இருக்கும் காங்கிரஸை சீரமைத்து புதிதாக ஒரு காங்கிரஸை உருவாக்குவதை தான் காங்கிரஸ் 2.0 என்று பிரசாந்த் கிஷோர் குறிப்பிடுகிறார் என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை பாதுகாப்பது, உரிமை கொண்டாடுவது மற்றும் முகஸ்துதிக்களை உடைப்பது, கூட்டணி பிரச்சனைகளை சரிசெய்வது, வாரிசு அரசியலை ஒழிக்க குடும்பத்தில் ஒருவருக்கு தான் வாய்ப்பு என்ற நிலையை உருவாக்குவது, காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் பதவிகளுக்கு பதவிகாலத்தை நிர்ணயம் செய்வது, 15000 தலைவர்களை கண்டறிவது, 1 கோடி தொண்டர்களை இந்தியா முழுவதும் உருவாக்குவது, சமூக ஆர்வலர்கள், இன்ஃப்ளூயசர்கள், மற்றும் மக்களோடு இணைப்பில் இருக்கக்கூடிய 200க்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்து பயன்படுத்துவது ஆகியவை காங்கிரஸ் செய்யவேண்டிய முக்கிய மாற்றங்கள் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவைகள் எல்லாம் கடந்த ஆண்டு காங்கிரஸ், பிரசாந்த் கிஷோர் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரசாந்த் கிஷோரால் கூறப்பட்டவை என்றும் இந்த ஆண்டு கொடுத்துள்ள வியூகங்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று தகவல்வெளியாகியுள்ளது.