திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் 3வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கட்சி உறுப்பினர்கள் அவரது நினைவுதினத்தை வீட்டிலேயே அனுசரிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அவரது நினைவுதினத்தையொட்டி அண்மையில் சட்டமன்றத்தில் குடியரசுத்தலைவர் அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்தார். 



அதன் பிறகு பேசிய அவர், “இந்தப் புகழ்பெற்ற மண்டபத்தில், தம்முடைய வாழ்நாள் முழுவதையும் மாநிலத்தின் மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த கருணாநிதியின் உருவப்படமும் இனி இருக்கும். இந்தியா, விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது, கலைஞர் தனது இளமைப் பருவத்திலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். உயர்ந்த இலட்சியங்களுடன் கூடிய சிறுவனாக இருந்தபோது, தாழ்த்தப்பட்டவர்களுக்காக, ஏழை - எளிய மக்களுக்காகப் பணியாற்றத் தொடங்கியபோது, நீண்ட காலமாக வெளிநாட்டு ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியா, அந்நிய ஆட்சியாளர்களால் சுரண்டப்பட்டு வறுமையிலும், கல்வியறிவின்மையாலும் சிக்கலில் இருந்தது. அவர் தமது இறுதி மூச்சின்போது, இந்த மண்ணும், இதன் மக்களும் அனைத்து துறைகளிலும் வியக்கத்தக்க முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைந்துள்ளதாகத் திருப்தி அடைந்திருக்க வேண்டும். தமது நீண்டகால, ஆக்கபூர்வமான வாழ்க்கையில் தாம் விழித்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் மாநில மக்களின் சேவைக்காகவும் தேசத்தின் சேவைக்காகவும் செலவிட்டோம் என்பதும் அவருக்கு திருப்தியளித்திருக்கும்.  தமிழ் செம்மொழியாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெறுவதை உறுதி செய்தவர் கருணாநிதி. கலைஞர் தனிச்சிறப்பு வாய்ந்த தலைவராகத் திகழ்ந்தார். நமது தேசிய இயக்கத்தின் தலைவர்களுடன் நமக்கு இருந்த கடைசி இணைப்புகளில் அவரும் ஒருவர்” எனக் குறிப்பிட்டார். 





கருணாநிதியைப் பற்றி பிற தலைவர்கள் குறிப்பிட்டது என்ன? 

ஏழைகளுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர் அவர். மாநில நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் முன் நின்றவர். அவர் தமிழக மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் - நரேந்திர மோடி, இந்தியப் பிரதமர்


'நீங்கள்தான் எங்கள் தலைவர், ஏதாவது செய்யுங்கள்’  - லாலு பிரசாத் யாதவ் 2010 மத்திய காங்கிரஸ் ஆட்சி காலத்தில்...


’இந்திய மற்றும் தமிழ்நாட்டு அரசியலில் அவரது பங்களிப்பின் வழியாக 70 ஆண்டுகால வரலாற்றை நமக்காக விட்டுச்சென்றுள்ளார் கருணாநிதி’ -  சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்


’தமிழகத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் கூட்டாட்சி மற்றும் தமிழ் மக்களுக்காக போராடியவர்’ - ஃபரூக் அப்துல்லா, ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்


’ஜனநாயக மதிப்பீடுகளை முன்னிலைப்படுத்தியவர். தமிழ்நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கம்’  - நிதீஷ் குமார், பீகார் முதலமைச்சர்


’ஒரு சிறந்த கலைஞர், ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் சமூகத்தின் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக எப்போதும் நிற்கும் ஒரு உண்மையான தலைவரை, ஒரு பன்முக மேதையை நம் நாடு அவரது மரணத்தின் மூலம் இழந்துள்ளது’ - மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர்


’அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி மற்றும் ஒரு சிறந்த தலைவர், அனைவராலும் நேசிக்கப்பட்டவர்’ - மம்தா பனர்ஜி, மேற்கு வங்க முதலமைச்சர்

“அப்பா அப்பா” என்பதைவிட,”தலைவரே தலைவரே” என நான் உச்சரித்ததுதான் என்வாழ்நாளில் அதிகம்.  - மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்


அறை முழுவதும் மகிழ்ச்சியும் நகைச்சுவையும் அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன - கனிமொழி கருணாநிதி , மக்களவை உறுப்பினர். 


Also Read: ’அண்ணாவின் இதயத்தை இரவலாய் பெற்றவன்’ - ஈடில்லா கருணாநிதி... நினைவுதினம்!