Election Commission: இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பது அனைவரின் மனதிலும் கேள்வியாக எழுந்துள்ளது. அந்த கேள்விக்கான பதில் மக்களவை தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துவிடும். கடந்த 19ஆம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


கே.சி.ஆருக்கு கடிவாளம் போட்ட தேர்தல் ஆணையம்:


ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துவிட்டது. முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 88 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. மூன்றாவது கட்டமாக வரும் 7ஆம் தேதி, 94 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.


தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் ஒரே கட்டமாக வரும் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த நிலையில், தேர்தல் விதிகளை மீறியதாகக் கூறி தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவுக்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.


காங்கிரஸ் கட்சியை பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாக கூறி, அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய கே. சந்திரசேகர் ராவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேர்தல் விதிகளை மீறினாரா கே.சி.ஆர்?


இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி, சிர்சில்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த கருத்துகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. வழிகாட்டுதல்களை மீறும் வகையில் உள்ளது. தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் மீதான தடை இன்று இரவு 8 மணி முதல் அமலுக்கு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


 






காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை தொடர்ந்து தேர்தலில் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படும் இரண்டாவது அரசியல் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் ஆவர். 


தெலங்கானாவில் மொத்தம் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, தெலங்கானாவில் கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தெலங்கானா காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த ரேவந்த் ரெட்டி முதலமைச்சரானார்.