Fact Check: கேரளாவில் கோயில் அருகே இறைச்சிக் கடை செயல்பட்டதாக பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


 இணையத்தில் பரவும் வீடியோ..!


ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக உள்ள கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள, ஒரு கோயிலின் கீழ் கோழிக்கடை இயங்கி வருவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. வீடியோவில் கோயில் போன்ற அமைப்பின் கீழே ஒரு சிறிய கடை உள்ளது. அதோடு ஒலிக்கும் ஒரு குரலில், "நண்பர்களே, இது சீதா ராமர் கோவில், அதன் கீழே ஒரு கடை உள்ளது. இது கோழி இறைச்சி விற்கும் ஒரு கடை. இது கோயில் சதுக்கம், அந்த கட்டிடம் சீதா ராமர் கோவில், இது ஒரு கோழிக்கடை. நீங்கள் மேலே பார்த்தால், ஹிந்தியில் ஏதோ எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள்” என பேசியுள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள நபர்,  “இந்துக்களே உறக்கத்தில் இருந்து எழுந்திருங்கள்.  இது கேரளாவின் வயநாட்டில் உள்ள சீதா ராமர் கோயில், ராகுல் காந்தியால் திறக்கப்பட்ட கோழிக்கடை இங்கு உள்ளது. இது வயநாடு,  ராகுல் காந்தியின் நாடாளுமன்ற தொகுதி” என குறிப்பிட்டுள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிருந்து வருகின்றனர்.


வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?


ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் உள்ள கூற்று தவறானது. கேரளாவின் வயநாட்டில் உள்ள சீதா ராமர் கோயின் என குறிப்பிடப்பட்டு இருப்பது,  பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவாகும்.  அந்த வீடியோ பாகிஸ்தானில் இருந்து வந்ததாக வைரலான பதிவில் பலரும் கமெண்ட் செய்து இருந்தனர். அதனடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில்,  ஆகஸ்ட் 25, 2023 அன்று "மகான் ராம் ஜெய்பால் வ்லாக்ஸ்" என்ற சேனலில் வெளியிடப்பட்ட யூடியூப் வோலாக் ( இங்கே காப்பகப்படுத்தப்பட்டுள்ளது ) எங்களுக்கு கிடைத்தது.


அந்த காட்சிகள் கேரள கோயில் என குறிப்பிடப்பட்ட விடியோவில் உள்ள, கோயிலுடன் பொருந்தக்கூடிய அம்சங்களுடன் உள்ளது.


வீடியோவில் காட்டப்பட்டுள்ள கோயில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜாங் மாவட்டத்தில் உள்ள அகமதுபூர் சியால் என்ற ஊரில் அமைந்துள்ளது. அந்த பகுதியைச் சுற்றி இந்துக்கள் யாரும் வசிக்கவில்லை. சுமார் 1:15 நிமிடத்தில், அந்த நபர் கோயிலையும் கோயிலுக்கு எதிரே உள்ள கோழிக்கடையையும் காட்டுகிறார். நாங்கள் யூடியூப் சேனலை மதிப்பாய்வு செய்தோம், பாகிஸ்தானில் இருந்து பல வீடியோக்களை அந்த யூடியூபர் வெளியிடப்பட்டதைக் கண்டறிந்தோம். 


அதே வீடியோ ஏப்ரல் 17 அன்று அந்த யூடியூபரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் ( இங்கே காப்பகப்படுத்தப்பட்டுள்ளது  ) பதிவேற்றப்பட்டது.  சீதா ராமர் கோவில் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ளது என்று பதிவின் தலைப்பு உணர்த்துகிறது. இந்த ரீல் கோயில் வயநாட்டில் உள்ளது என்ற பொய்யான கூற்றுகளுடன் தற்போது பரப்பப்பட்டு வருகிறது.



கோயில் வரலாறு:


பாகிஸ்தானின் தி ஃப்ரைடே டைம்ஸ் நாளிதழில் வெளியான கட்டுரையில்,  சீதா ராமர் கோயிலின் படம் இடம்பெற்றுள்ளது. ஒரு வீடியோவுடன் படத்தை ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​இரண்டும் கோயிலின் மேல் இந்தியில "ஓம்" மற்றும் "சீதா ராம்" என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டு இருப்பதை காண முடிகிறது. ஜாங் மாவட்டத்தில் உள்ள அஹ்மத்பூர் சியால் தாலுகாவில் உள்ள சீதா ராமர் கோவில் 19 ஆம் நூற்றாண்டிலிருந்து அந்த பகுதியில் உள்ள கட்டிடக்கலையின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜாங் மாவட்டத்தின் துணை மாவட்டமான அஹ்மத்பூர் சியால், ஒரு காலத்தில் பல கோயில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களுடன் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த நகரமாக இருந்தது.


ஒரு உள்ளூர் வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, 1992 இல் இந்தியாவில் பாபர் மசூதி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வன்முறை கும்பல் கோவிலை தாக்கியது. அதைதொடர்ந்து தற்போது சந்தையாக உள்ளது. கோயிலுக்குள் இருந்த விலைமதிப்பற்ற பொருட்களில் பெரும்பாலானவை உள்ளூர் மக்களால் திருடப்பட்டுள்ளன.






கோவில் எங்கே அமைந்துள்ளது?


கூகுள் மேப்பில் கோவிலை கண்டுபிடித்து , கோவிலின் சில புகைப்படங்களைக் கண்டோம். அதே கோவில்தான் என்பதை உறுதிப்படுத்த படங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த கோவில் நிரந்தரமாக மூடப்பட்டு, பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள ஜாங் மாவட்டத்தில் உள்ள அகமதுபூர் சியாலில் அமைந்துள்ளது.


தீர்ப்பு


பாகிஸ்தானில் கைவிடப்பட்ட கோயிலின் வீடியோ, வயநாட்டில் உள்ள ஒரு இந்து கோவில் என பொய்யாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள காட்சிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் எடுக்கப்பட்டது மற்றும் இந்தியாவுடன் தொடர்பில்லாதது. எனவே, இந்தக் கூற்று தவறானது என்பது உறுதியாகியுள்ளது.


also read: Video from Pakistan falsely passed off as meat shop running under temple in Kerala


பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக logically facts என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளது.