காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தன்னை ஒரு மணி நேரம் காக்க வைத்ததாக  முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது தேசிய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


காங்கிரஸ் கட்சியில் இருந்தவரே சோனியா குறித்து சரமாரி புகார்


காங்கிரஸ் ஆட்சியில் மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து அந்த கட்சியின் முக்கிய உறுப்பினராக செயல்பட்ட நஜ்மா ஹெப்துல்லாதான் சோனியா காந்தியை நோக்கி இந்த புகாரை தெரிவித்துள்ளார். தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்


 


எதற்காக காக்க வைத்தார் சோனியா ?


நாடாளுமன்றங்களுக்கு இடையிலான யூனியனின் தலைவராக  1999ஆம் ஆண்டு தான் தேர்வான செய்தியை தெரிவிக்க, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதாகவும், அவரோ தன்னை தொலைபேசியிலேயே ஒரு மணி நேரம் காக்க வைத்தார் என்றும் நஜ்மா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிடுள்ளார்.


சோனியாவுடன் மோதல், கட்சியை விட்டுச் சென்ற நஜ்மா


சோனியாகாந்தியுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாடு, மோதல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, ஒரு கட்டத்தில் பாஜகவில் இணைந்தார் நஜ்மா, அவருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தப்போது, சிறுபான்மையினர் விவ்காரத்துறை அமைச்சராக பதவி கொடுத்தது பாஜக, பின்னர் மணிப்பூர் மாநில ஆளுநராகவும் நஜ்மா செயல்பட பாஜக வாய்ப்பு வழங்கியது.


நஜ்மா சொல்வது என்ன ?


தன்னுடைய சுயசரிதையான ‘இன் பர்ஸ்யூட் ஆஃப் டெமாக்கிரசி ; பியாண்ட் பார்ட்டி லைன்ஸ்’ என்ற புத்தகத்தில், பல்வேறு பிரச்னைகள் குறித்து குறிப்பிட்டுள்ள நஜ்மா, சோனியா காந்தியுடன் ஏன் கருத்து மோதல் ஏற்பட்டது ? தான் ஏன் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக நேர்ந்தது என்பதையெல்லாம் விரிவாக நஜ்மா எழுதியுள்ளார். அதோடு, கடந்தச் 1999ஆம் ஆண்டு, ஐ.பி.யு எனப்படும் சர்வதேச நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான யூனியன் தலைவராக தான் தேர்வானது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், இது இந்திய நாடாளுமன்றத்தில் தொடங்கிய அவரது பயணத்தில் ஒரு மைல் கல் என்றும் நஜ்மா குறிப்பிட்டுள்ளார்.


பிரதமருக்கு பெரிய மனது - நஜ்மா


மேலும், இந்த தகவலை தெரிவிக்க ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பெர்லினில் இருந்து தொலைபேசி மூலம் அப்போதைய பிரதமர் வாஜ்பேயை தான் தொடர்புகொண்டதாகவும், அவர் உடண்டியாக அழைப்பை ஏற்று, தன்னை பாராட்டியதுடன், தான் இந்தியா வந்ததும் இதனை கொண்டாடுவோம் என்று பெரிய மனதோடு சொன்னதோடு, மத்திய இணையமைச்சராக இருந்த என்னை கேபினட் அந்தஸ்க்கு வாஜ்பாய் உயர்த்தினார் என்று நஜ்மா தெரிவித்துள்ளார்.


ஆனால், தான் சோனியாகாந்திக்கு மரியாதை நிமித்தமாக இந்த செய்தியை தெரிவிக்க அழைத்தபோது, மேடம் பிசியாக இருப்பதாகவும் அவர் தன்னை காத்திருக்க சொன்னதாகவும் கூறி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொலைபேசியிலேயே தன்னை அவருடைய உதவியாளர்கள் காக்க வைத்ததாக நஜ்மா குறிப்பிட்டுள்ளது தேசிய அரசியலில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதற்கு சோனியா காந்தி தரப்பில் இருந்து விரைவில் இந்த குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி பதில் தரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.