Modi BJP: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் பாஜகவின் வியூகத்தில் புதிய மாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
பாஜகவின் முகமான பிரதமர் மோடி
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை, யாருமே எதிர்பாராத விதமாக 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. அவரை முன்னிலைப்படுத்தியே அந்த தேர்தல் முழுவதும் அக்கட்சி பரப்புரையை முன்னெடுத்தது. அதன் விளைவாக கிடைத்த பிரமாண்ட வெற்றி மூலம் தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது. அந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜகவிற்காக பிரதமர் மோடி சூறாவளி பரப்புரைகளை மேற்கொண்டார். அடுத்தடுத்து பல மாநிலங்களில் அக்கட்சி ஆட்சியை பிடிக்க பிரதமர் மோடி முக்கிய பங்காற்றினார். ”மோடி, மோடி” என்ற கோஷம் பாஜகவின் பெரும் பலமாக மாறியது. இதனால், பாஜக என்றாலே மோடி தான் என்ற வலுவான பிம்பம் உருவானது.
எதிர்பாராத தோல்வி:
இந்நிலையில் தான், 2024 நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதன் பரப்புரையின் போது நாட்டின் சக்தி வாய்ந்த தலைவரான மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார் என்றும், 400-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றுவோம் என்றும் பாஜக சூளுரைத்தது. நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இதே கோஷத்தை முன்வைத்து பரப்புரை மேற்கொண்டது. ஆனால், பாஜகவால் தனிப்பெரும்பான்மையை கூட பிடிக்க முடியாமல் வெறும் 240 இடங்களில் மட்டுமே வென்றது. 10 ஆண்டுகால தனிப்பெருன்பான்மை ஆட்சி முடிவுக்கு வந்து, கூட்டணி கட்சிகளின் தயவுடன் கூட்டணி ஆட்சியையே பாஜக அமைத்தது. இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. தோல்வியை தொடர்ந்து, பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் குரல்கள் வலுக்க தொடங்கியது.
பிரதமர் மோடியை ஓரங்கட்டும் பாஜக?
இந்நிலையில் தான், பிரதமர் மோடியை பாஜக ஓரங்கட்ட தொடங்கியுள்ளது என்ற கருத்தும் வலுவாக பரவ தொடங்கியுள்ளது. அதற்கு உதாரணமாக தான் அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில தேர்தல்கள் அமைந்துள்ளன. வழக்கமாக தேர்தல்களின்போது சூறவாளி பரப்புரையுடன் மோடி ரோட் ஷோ மேற்கொள்வது வழக்கம். ஆனால், மிக முக்கிய மாநிலமான மகாராஷ்டிராவில் பிரதமர் மோடி பெரிய அளவிலான பரப்புரைகள் எதையும் மேற்கொள்ளவில்லை. ரோட் ஷோவும் நிகழ்த்தடவில்லை. மேலும், ஆரம்ப கட்டத்தில் மட்டுமே பரப்புரை மேற்கொண்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் நேரத்தில் வெளிநாட்டு பயணங்களையும் மேற்கொண்டு ஆச்சரியம் அளித்தார். இதனிடையே, தங்கள் கட்சிக்காக மோடி பரப்புரை செய்ய வரவேண்டாம் என, பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்ததா?
முன்னதாக கர்நாடகா சட்டமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி தீவிர பரப்புரை மேற்கொண்டும், பாஜகவால் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இதனிடையே, வடகிழக்கு மாநில சட்டமன்ற தேர்தலின் போது, கூட்டணி கட்சி தலைவர்களே பிரதமர் மோடி இங்கு வரவேண்டாம் என கூறியதை வெளிப்படையாக காண முடிந்தது. இதற்கு காரணம் மணிப்பூரில் ஓராண்டிற்கும் மேலாக நீடிக்கும் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, மத்திய மற்றும் மாநில அரசுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஆதங்கம் அப்பகுதி மக்களிடையே நிலவுவதே ஆகும். ஹரியானா மாநிலத்திலும் விவசாயிகள் மத்தியில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. இதனால், அந்த மாநில சட்டமன்ற தேர்தலிலும் பிரதமர் மோடி பெரிதாக தலைகாட்டவில்லை. இதனிடையே, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலின் போதும் பிரதமர் மோடியை பரப்புரைக்காக பாஜக அதிகம் பயன்படுத்தவில்லை. பெரும்பான்மை ஆட்சியை இழந்ததன் மூலம் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளதாக பாஜக உணருவதாகவும், அதன் காரணமாகவே மாநில பிரச்னைகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி தேர்தல்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இரட்டை இன்ஜின் என்ற பாஜகவின் வாசகமும் வலுவிழக்க தொடங்கியுள்ளது. மேலும், 2029ம் ஆண்டுக்குள் நரேந்திர மோடிக்கான மாற்றாக புதிய தலைவரை கண்டெடுக்கும் பணிகளையும் பாஜக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோடியின் பங்களிப்பே இன்றி அடுத்தடுத்து சட்டமன்ற தேர்தல்களிலும் பெற்றுள்ள வெற்றி, அவர் இன்றியே சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் பாஜகவிற்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு - பாஜக திட்டம்:
மோடி குறித்து பேசும் காங்கிரஸ் கட்சியினர், ”சில தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்து, இருந்தாலும் மறைந்தாலும் மக்களால் கொண்டாடப்படுவார்கள். ஆனால் மோடி அப்படிப்பட்ட தலைவர் அல்ல. ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்ட பிறகு அவரை மக்கள் நினைவில் கூட கொள்ளமாட்டார்கள், அந்த அளவில் தான் அவரது செயல்பாடு உள்ளது” என பேசுகின்றனர். ஆனால், ”10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தால் எந்தவொரு தலைவர் மீதும் அதிருப்தி ஏற்படுவது என்பது இயல்பு தான், அதற்காக மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டது என கூறுவது உண்மையல்ல” என பாஜக தரப்பினர் கூறுகின்றனர். மேலும், மோடியின் வயதையும் கருத்தில் கொண்டு தான், பரப்புரைக்கு போதுமான அளவில் மட்டுமே அவரை பயன்படுத்துவதாகவும் கட்சி சார்பில் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மை ஆட்சியின் போது இருந்த சுறுசுறுப்பை, மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு பிரதமர் மோடியிடம் காணமுடியவில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது.