பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முன்னாள் சிறப்பு டிஜிபியும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ராஜேஸ் தாஸ்க்கு கட்டாய ஓய்வை அறிவித்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன



ராஜேஸ்தாஸ்


திரிபாதிக்கு போட்டியாக வந்த ராஜேஸ்தாஸ்


எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அந்த பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டவர் ராஜேஸ்தாஸ். சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி இருந்த நிலையில், அவருக்கு போட்டியாக இந்த பதவி உருவாக்கப்பட்டு ராஜேஸ்தாசை எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.


எடப்பாடிக்கு ஒத்துழைக்காத திரிபாதி ஐபிஎஸ்


டிரான்ஸ்பர், வழக்கு பதிவு, விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகளில் டி.ஜி.பியாக இருந்த திரிபாதி ஐபிஎஸ் தனக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கருதிய எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ஆதரவாளரான ராஜேஸ்தாஸ்க்கு டிஜிபிக்கு நிகரான அதிகாரங்களை கொடுத்து சிறப்பு டிஜிபியாக்கினார்.


தினகரனுக்கு நெருக்கடி கொடுத்த ராஜேஸ்தாஸ்


ராஜேஸ்தாஸ் சிறப்பு டிஜிபி ஆனதும் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பது, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டார். பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலை ஆகி வந்த நிலையில், தமிழக எல்லையான ஓசூருக்கு நேரடியாக சென்ற சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், அங்கு முகாமிட்டு கூட்டத்தையும் அவருடன் அந்த கார்களையும் மறித்து பறிமுதல் செய்தார். அதோடு, அதிமுக கொடி கட்டி வந்த கார்களை நிறுத்தி ராஜேஸ்தாஸ் தலைமையிலான போலீசார் கொடிகளை அப்புறப்படுத்தினர்.  இருப்பினும், சசிகலாவிற்கு அப்போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு பெங்களூரு முதல் சென்னை வரை தொண்டர்கள் புடை சூழ அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்.


அப்போதே எச்சரித்த உதயநிதி


2021 தேர்தல் பிரச்சாரங்களின்போது திமுக கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பது, கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது என்று ராஜேஸ்தாஸ் செயல்பட்ட நிலையில், நாகையில் தேர்தல் பரப்புரையில் பேசிய உதயநிதி ’சிறப்பு டிஜிபி என்னென்ன செய்கிறார் என்று பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒருதலைப்பட்சமாக நடக்கும் காவல் அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கப்படும்’ என்ற தொனியில் பேசியிருந்தார். இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும் அவர் மீதான விசாரணை அரசு சார்பில் துரிதப்படுத்தப்பட்டது.


எடப்பாடி பழனிசாமி ஆய்வுக்கு பாதுகாப்பு சென்ற போது சம்பவம்


முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது டெல்டா மாவட்டத்திற்கு ஆய்வுக்கு  சென்றபோது அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஸ்தாஸூம் சென்றார். ஆய்வு கூட்டம் முடிந்து ராஜேஸ்தாஸ் திரும்புபோது மரியாதை நிமித்தமாக மாவட்ட எல்லையில் நின்ற ஒரு பெண் எஸ்.பியை தன்னுடைய காரில் ஏற்றி சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் எஸ்.பி நேரடியாக தலைமை செயலகம் வந்து புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் ராஜேஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்


ராஜேஸ்தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை


விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ராஜேஸ்தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


கட்டாய ஓய்வு கொடுத்த அரசு – சிறைக்கு செல்லும் ராஜேஸ்தாஸ்


இந்நிலையில், சிறப்பு டிஜிபியாக கெத்தாக வலம் வந்த ராஜேஸ்தாஸ்க்கு கட்டாய ஓய்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவுவிட்டிருப்பதாகவும் இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.ஸ் பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.