சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.


சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 7ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் 17ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மிசோரத்தில் நவம்பர் மாதம் 7ஆம் தேதியும் மத்திய பிரதேசத்தில் நவம்பர் மாதம் 17ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. 


ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும் தெலங்கானாவில் இன்றும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் மாதம் 3ஆம் தேதி) எண்ணப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.


சத்தீஸ்கர்:


நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. முதற்கட்ட தேர்தலில் 71 சதவிகித வாக்குகள் பதிவாகிய நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் 74 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 41 முதல் 53 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல, பிரதான எதிர்க்கட்சியான பாஜக, 36 முதல் 48 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள், 0 இடங்கள் வரை 4 வெற்றிபெறலாம் என கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் முதலமைச்சராக தொடர வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மத்திய பிரதேசம்:


பாஜகவின் கோட்டைகளில் ஒன்றாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கடந்த 17ஆம் நடந்த வாக்குப்பதிவில் 76.22 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 230 தொகுதிகளில் 113 முதல் 137 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஆளுங்கட்சியான பாஜக, 88 முதல் 112 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் வர வேண்டும் என 35 சதவிகிதத்தினரும், பாஜகவின் மூத்த தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான சிவராஜ் சிங்கே முதலமைச்சராக தொடர வேண்டும் என 30 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


ராஜஸ்தான்:


ராஜஸ்தானை பொறுத்தவரையில், கடந்த 30 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த கட்சி தேர்தலில் வென்றதில்லை. தற்போது, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 25ஆம் தேதி நடந்த தேர்தலில் 71.64 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.


ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடந்த 199 தொகுதிகளில் 94 முதல் 114  தொகுதிகள் வரையில் பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.


அதேபோல, தற்போது ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ், 71 முதல் 91 தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பின்போது, முதலமைச்சராக யார் வேண்டும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, பாஜகவின் வசுந்தர ராஜே சிந்தியா முதலமைச்சராக வர வேண்டும் என 35 சதவிகிதத்தினரும் தற்போதைய முதலமைச்சருமான அசோக் கெலாட் வர வேண்டும் என 20 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தெலங்கானா:


கடந்த 2014ஆம் ஆண்டு, புது மாநிலமாக உருவான தெலங்கானாவில் கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தென்னிந்தியாவில் கவனம் செலுத்தி வரும் பாஜக, தெலங்கானாவில் கணிசமான அளவில் வெற்றியை ஈட்ட முயற்சித்து வருகிறது. அதேபோல, இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து, ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


ஏபிபி செய்தி நிறுவனம் சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 49 முதல் 65 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல, பிஆர்எஸ், 38 முதல் 54 தொகுதிகளிலும் பாஜக, 5 முதல் 13 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 
வரவிருக்கும் தேர்தலில் 39 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிஆர்எஸ் 37 சதவிகித வாக்குகளையும் பாஜக 16 சதவிகித வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.


மிசோரம்: 


மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோரம்தங்கா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பிரதான எதிர்க்கட்சியாக சோரம் மக்கள் இயக்கம் உள்ளது. அதற்கு இணையான செல்வாக்கமிக்க கட்சியாக காங்கிரஸ் உள்ளது.


ஏபிபி செய்தி நிறுவனம், சி வோட்டருடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகிழக்கில் அமைந்துள்ள மிசோரம் மாநிலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஆளும் மிசோ தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணி, 15 முதல் 21 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோரம் மக்கள் இயக்கம், 12 முதல் 18 தொகுதிகளையும் காங்கிரஸ், 2 முதல் 8 தொகுதிகளையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 


யார் முதலமைச்சராக வர வேண்டும் என எழுப்பப்பட்ட கேள்விக்கு சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவுக்கு ஆதரவாக 32.4 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போதைய முதலமைச்சரும் மிசோ தேசிய முன்னணியின் தலைவருமான சோரம்தங்காவுக்கு ஆதரவாக 27.2 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.